சினிமா

படைப்பு சுதந்திரம் கருதி நான் தான் விலகினேன் - இயக்குநர் பாலா

படைப்பு சுதந்திரம் கருதி நான் தான் விலகினேன் - இயக்குநர் பாலா

rajakannan

வர்மா படத்தில் இருந்து, படைப்பு சுதந்திரம் கருதி தானே விலகியதாக இயக்குநர் பாலா கூறியுள்ளார். 

பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்த திரைப்படம் ‘வர்மா’. இந்தப் படத்தின் மூலம் துருவ் முதன்முறையாக திரைத்துறையில் புதுமுக நடிகராக அறிமுகமாக இருந்தார். இந்தப் படம் 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’யின் ரீமேக் ஆகும். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகவும் பேசப்பட்டது. 

அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பினை தொடங்கினார் இயக்குநர் பாலா. காட்மாண்ட், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. பின்னர், வர்மா படத்தின் ஃபர்ஸ் லுக், ட்ரெய்லர் வெளியாகி கலவையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. 

இந்நிலையில், பாலா இயக்கத்தில் திருப்தி இல்லையென்பதால், ‘வர்மா’ திரைப்படத்தை கைவிடுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் பிப்ரவரி 7-ம் தேதி அறிவித்தது. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘அர்ஜுன் ரெட்டி படத்திற்கும் பாலா எடுத்துள்ள படத்திற்கும் நிறைய கிரியேட்டிவ் வித்தியாசங்கள் இருக்கிறது. புதிய டீம் உடன் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழில் மீண்டும் எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், வர்மா படம் கைவிடப்பட்டது குறித்து இயக்குநர் பாலா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகுவது என்பது தான் எடுத்த சொந்த முடிவு என்று தெரிவித்துள்ளார். வர்மா படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப் பட்டிருக்கிறேன் என்றும் பாலா கூறியுள்ளார்.