சினிமா

நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு மெமரி கார்டை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு மெமரி கார்டை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

webteam

நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை, நடிகர் திலீப்புக்கு வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்த மலையாள நடிகை ஒருவர், காரில் கடத்தப்பட்டு பாலியில் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பல்சர் சுனில் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பிரபல மலையாள ஹீரோ, திலீப் கைது செய்யப்பட்டார். 85 நாள் சிறைவாசத்துக்கு பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  

இந்நிலையில், நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை தனக்கு வழங்க வேண்டும் என்று எர்ணாகுளம் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடிகர் திலீப் மனு தாக்கல் செய்தார். இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின் உயர் நீதிமன்றமும் இதை உறுதி செய்ததையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவில், ‘நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை திலீப்புக்கு வழங்கினால் அது நடிகையின் புகழுக்கும், தனி மனித உரிமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நடிகையின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம்’ என கூறப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ’நடிகர் திலீப் அல்லது அவரது வழக்கறிஞர் மெமரி கார்டில் இருப்பதை நிபந்தனைகளுடன் பார்க்கலாம். ஆனால், திலீப்பிடம் அதைக் கொடுக்க அனுமதிக்க முடியாது’ என்று தீர்ப்பளித்தது.