சீயான் விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘ஆதித்ய வர்மா’. இந்தப் படத்தை முதலில் பாலா இயக்கி வந்தார். இடையில் அந்தப் படத்தில் இருந்து அதிரடியாக அவர் விலகிக் கொண்டார். பாலா இயக்கிய வரை வைத்து இந்தப் படத்தின் முதல் பார்வை சுவரொட்டி வெளியான போது அது பெரிய அளவு விமர்சனத்திற்கு உள்ளானது. நெட்டிசன்கள் அந்த போஸ்டரை கடுமையாக விமர்சித்தனர்.
அதனை அடுத்து இந்தப் படத்தின் இயக்குநரை மாற்றி ‘ஆதித்ய வர்மா’ என தலைப்பை மாற்றி மீண்டும் எடுக்கப்பட்டது. அதன் பிறகு துருவ் நடித்து வந்த இந்தப் படத்தின் மீது புதிய எதிர்பார்ப்பு மீண்டும் உருவானது. சகல வேலைகளும் முடிந்து கடந்த வாரம் இந்தப் படம் திரைக்கு வந்தது. படத்தை பார்த்த பலரும் துருவ் நடிப்பை மிகவும் பாராட்டினர். படம் குறித்து நல்லவிதமான விமர்சனங்களே வெளியாகின.
இந்நிலையில், மீண்டும் படம் குறித்த ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. மருத்துவராக இந்தப் படத்தில் நடித்துள்ள துருவ், ஒரு காட்சியில் அறுவை சிகிச்சையின் போது மது அருந்தி இருப்பதாக காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சியை பார்த்து மருத்துவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறனர். இந்தத் தவறுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பொறுப்பேற்க வேண்டும் என மருத்துவ சங்கத்தின் செயலாளர் கூறி உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்டக் காட்சிகள் மக்கள் மனதில் மருத்துவர்களை பற்றி மோசமாக உணரச் செய்யும் என்று அவர் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.
தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘ஆதித்ய வர்மா’ என்பது குறிப்பிடத்தக்கது.