சினிமா

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், தயாரிப்பு பா.ரஞ்சித்?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், தயாரிப்பு பா.ரஞ்சித்?

sharpana

’கர்ணன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து விளையாட்டை மையப்படுத்திய படம் இயக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

’விபத்துகள்... தற்கொலைகள்... என திடீர் திடீரென்று நடக்கும் சம்பவங்களை வழக்கமான ஊடகச் செய்திகளாக கடந்து விடக்கூடாது. விசாரணை செய்துபார்த்தால் கொலைகளாக இருக்கலாம். அதுவும், மரணித்தது இளம் பருவத்தினராக இருந்தால் அவை, திட்டமிடப்பட்ட ஆணவப்படுகொலைகளாக இருக்கலாம்’ என்ற  உண்மையை  ’பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் சமூகத்திற்கு அழுத்தமாகச் சொல்லி கவனம் ஈர்த்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களை குவித்தது. அதனைத்தொடர்ந்து, நடிகர் தனுஷ் 'கர்ணன்' படத்தின் வாய்ப்பை மாரி செல்வராஜுக்கு கொடுத்தார். இப்படத்தின், படப்பிடிப்பு தற்போது முடியவுள்ள நிலையில், மாரிசெல்வராஜ் தனது அடுத்தப் படத்தை துருவ் விக்ரமை வைத்து எடுக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெற்றி பெற்ற ’அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான பாலாவின் ‘வர்மா’வில்தான் அறிமுகமானார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு வராததால், ஆதித்யா வர்மாவாக தயாரிப்பு நிறுவனம் வேறு இயக்குநரை வைத்து இயக்கி கடந்த ஆண்டு வெளியிட்டது. ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், இந்த வருடம் பாலா இயக்கிய ‘வர்மா’ வெளியானது. அதுவும், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘விக்ரம் 60’ படத்தில் துருவ் விக்ரமுக்கு விக்ரம் வில்லனாக நடிக்கிறார். கர்ணன் படமும், ’விக்ரம் 60 படமும் முடிந்தபிறகு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை தயாரிப்பவர் வேறு யாருமல்ல... ’பரியேறும் பெருமாள்’ படத்தை தயாரித்த இயக்குநர் பா.ரஞ்சித் தான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் ரஞ்சித் அடுத்த ஆண்டு விளையாட்டை மையப்படுத்தி படத்தை தயாரிக்கவிருப்பதாகவும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கிறார் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.