எல்.ஜி.எம். படக்குழு ட்விட்டர்
சினிமா

ஹரிஷ் கல்யாணின் ‘எல்.ஜி.எம்.’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் தோனி!

அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

சங்கீதா

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். நடப்பு சீசனில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் லீக் போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வியடைந்தாலும், அடுத்து வந்த லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரானப் போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது. வரும் புதன்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சென்னை அணி மோதவுள்ளது.

கிரிக்கெட் மட்டுமின்றி ஏராளமான துறைகளிலும் தோனி முதலீடு செய்து வருகிறார். அந்தவகையில் விவசாயம் செய்வது, பள்ளிக் கூடங்கள் நடத்தி வருவது, ஸ்டார்ட்டப் நிறுவனங்களில் முதலீடு செய்வது, அத்துடன் விளம்பரப் படங்களில் நடிப்பது என மிகவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதில் லேட்டஸ்ட்டாக, திரைத்துறையிலும் தோனி கால் பதித்துள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.

அதன்படி, தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், தமிழில் ஹரீஷ் கல்யாண் மற்றும் இவானா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘Let’s get married- -எல்.ஜி.எம்.’ என்ற படத்தை தயாரிப்பதாக அறிவித்தது. தோனிக்கும், சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தனி பிணைப்பு உள்ளதால், தனது புரொடக்ஷனில் உருவாகும் முதல் படத்தை தமிழில் தயாரிக்க முடிவுசெய்து, இந்த அறிவிப்பு வெளியானது.

அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டியின்போது கூட ஹரிஷ் கல்யாண், இவானா மற்றும் நதியா ஆகியோர் சிஎஸ்கேவின் டி-சர்ட் அணிந்து மேட்ச் பார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகின.

இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பார்வை எனப்படும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை ஏழு மணிக்கு, தோனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்திற்கு விஸ்வஜித் என்ற மலையாள இசையமைப்பாளர் இசையமைக்கிறார்.

LGM

 ‘லவ் டுடே’, ‘கோமாளி’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த ப்ரதீப் இ.ராகவ், படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.