நாட்டுப்புற இசைப் பாடகரும், திரைப்பட பின்னணிப் பாடகருமான வேல்முருகனுக்கு தருமபுரம் ஆதீனம் ‘கிராமிய இசை கலாநிதி’ என்கிற பட்டத்தை வழங்கிகௌரவித்துள்ளது.
பாடகர் வேல்முருகன் நாட்டுப்புற பாடல்களைப் பாடி புகழ்பெற்றவர். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனால் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் ‘மதுர குலுங்க குலுங்க’ என்ற பாடல் மூலம் திரைப்பட பின்னணி பாடகராக அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து ‘நாடோடிகள்’, ‘ஆடுகளம்’, ‘என்னை அறிந்தால்’, ‘அசுரன்’ வரை பல படங்களில் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே ஹிட் அடித்துள்ளது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.
பல கோவில் விழாக்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் வேல்முருகன். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள விருதகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், பாடகர் வேல்முருகன் இசைக் கச்சேரி நடத்தினார். இதைத் தொடர்ந்து, இந்த விழாவில் பாடகர் வேல்முருகனுக்கு ‘கிராமிய இசை கலாநிதி’ என்கிற பட்டத்தை தருமபுரம் ஆதினம் வழங்கி, தங்கப்பதக்கத்தையும் பரிசாக அளித்தார்.
அதோடு தருமபுரம் அதினத்தின் ஆஸ்தான பாடகராகவும் வேல்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் பாடகர் யேசுதாஸ் இந்த பொறுப்பில் இருந்து வந்தார். அவருக்குப் பிறகு தருமபுரம் ஆதீனம், முதல் முறையாக கிராமிய நாட்டுப்புற பாடகரை சிவாலயங்களுக்கு ஆஸ்தான பாடகராக அறிவித்துள்ளது. நாட்டுப்புற இசைப் பாடகர் கவுரவிக்கப்பட்டது வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்வின்போது திருப்பணிக் கமிட்டி குழு தலைவர் அகர்சந்த், தொழிலாளர் துறை அமைச்சர் சி. வெ.கணேசன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பட்டம் பாடகர் வேல்முருகனுக்கு வழங்கப்பட்டது.