வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தில் நடித்ததற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ’அசுரன்’ படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆண்டு வெளியான ’அசுரன்’ வசூல் சாதனை செய்ததோடு, தனுஷின் சிறந்த நடிப்பிற்காக பாராட்டுகளையும் குவித்தது. தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம், பசுபதி உள்ளிடோர் நடிப்பில் போட்டிப்போட்டுக்கொண்டு நடித்தார்கள். எழுத்தாளர் பூமணியின் ’வெக்கை’ நாவலை நெகிழ்ச்சியூட்டும் காட்சிகளாக ரசிக்க வைத்தார் வெற்றி மாறன். தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு ‘நடிப்பு அசுரன்’ என்றே புகழத் தொடங்கினார்கள்.
ஏற்கெனவே ஊடகங்களின் பல்வேறு விருதுகள், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான படம் போன்ற பல்வேறு சிறப்புகளை ’அசுரன்’ பெற்றிருக்கிறது. தெலுங்கிலும் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் ’நரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இவ்வளவு பாராட்டுகளை குவித்ததால், நடிகர் தனுஷ் தனது ட்விட்டரில் பயோவை “ASURAN/Actor” என்றே பெருமையுடன் மாற்றினார்.
இந்நிலையில், அவருக்கு தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருது ‘அசுரன்’ படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஏற்கெனவே, கடந்த 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘ஆடுகளம்’ படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார்.அதேபோல சிறந்த நடிகைக்கான தேசிய விருது கங்கனா ரனாவத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.