சினிமா

‘கல்வில கிடைக்கிற காசு.. அரசியல்ல கிடைக்காது’- எப்படி இருக்கு தனுஷின் ‘வாத்தி’ ட்ரெய்லர்?

‘கல்வில கிடைக்கிற காசு.. அரசியல்ல கிடைக்காது’- எப்படி இருக்கு தனுஷின் ‘வாத்தி’ ட்ரெய்லர்?

சங்கீதா

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 

‘நானே வருவேன்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளப் படம் ‘வாத்தி’. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தை, சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம், தெலுங்கில் ‘சார்’ என்றப் பெயரில் உருவாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும், லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனமும் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது.

கல்வியை மையமாக கொண்டு தயாராகியுள்ள இந்தப் படத்தில், தனுஷுடன், சம்யுக்தா மேனன், பி. சாய் குமார், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற 17-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தந்தை - மகனாக, சமுத்திரக்கனி, தனுஷ் நடித்திருந்த நிலையில், இந்தப் படத்தில் எதிரும், புதிருமாக தனுஷ் கதாநாயகனாகவும், சமுத்திரக்கனி எதிர்மறை கதாபாத்திரத்திலும்  நடித்துள்ளனர். கல்வியை சேவையாக பார்க்காமல் அதனை வைத்து பணம் சம்பாதிக்கும் கும்பலை எதிர்க்கும், ஒரு ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார்.

ட்ரெய்லரை பார்க்கும் போது கமர்ஷியல் தன்மை அதிக அளவில் இருப்பதுபோல் தெரிகிறது. திரைக்கதையின் போக்கை பாதிக்காத வகையில் திரைக்கதைக்கு தகுந்தாற்போல் கமர்ஷியல் அம்சங்கள் இருந்தால் படம் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் உள்ளது. மாஸ் காட்சிகளுக்கு ஆசைப்பட்டு கதையின் போக்கில் கோட்டைவிடவும் வாய்ப்பு இருக்கின்றது. மாரி போன்ற படங்கள் அதற்கு உதாரணம். வேலையில்லா பட்டதாரி போல் அமைந்துவிட்டால் நிச்ச்யம் தனுஷ் கேரியரில் முக்கியமான படமாக நிச்சயம் அமையும்.