சினிமா

'ஜகமே தந்திரம்' இரண்டாம் பாகம் வருமா? - தனுஷ் தந்த 'க்ளு'

webteam

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 'ஜகமே தந்திரம்' படம் வெள்ளிக்கிழமை நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவிருக்கும் நிலையில், படம் தொடர்பாக தனுஷ் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதத்தில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிப்போனது. இதனால், 'ஜகமே தந்திரம்' ஓடிடியிலா, தியேட்டரிலா என்ற விவாதங்கள் நடந்துகொண்டிருந்த நிலையில், சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இதற்கிடையே, ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய தனுஷ், ''ஜகமே தந்திரம் படத்தில் என்னுடைய கேரக்டர் சுருளி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. சுருளி கதாபாத்திரத்துக்கு ஒரு தொடர்ச்சியை படத்தின் அடுத்த பாகத்தை எழுத நான் கார்த்திக் சுப்பராஜை வலியுறுத்தியுள்ளேன்.

எனது ரசிகர்கள் இந்தப் படத்தை விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். எனது ரசிகர்களைத் தவிர, மற்றவர்களும் இந்தப் படத்தைப் பாராட்டுவார்கள்" என்றுள்ளார். இதன்மூலம் படத்தின் அடுத்த பாகம் தயாராகலாம் என்று தனுஷ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும், 'சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா' என்று ட்ரெய்லரில் தனுஷ் பேசிய வசனம் பெரிய அளவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து நேற்று 190 நாடுகளில் 17 மொழிகளில் ஒரேயொரு சுருளி என்கிற வாசகத்துடன் தனுஷ் கெத்தாக போஸ் கொடுத்திருக்கும் போஸ்டர் ஒன்றை படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டு இருந்ததும் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. நாளை மறுநாள் படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.