dhanush pt
சினிமா

தொடர்ந்து எழுந்த கண்டனம்; தனுஷ் படத்தின் ஷூட்டிங்கிற்கு வழங்கிய அனுமதி ரத்து.. என்ன நடந்தது?

திருப்பதியில் நடைபெற்று வந்த நடிகர் தனுஷின் புது பட ஷூட்டிங்கிற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தார் மாவட்ட எஸ்.பி பரமேஸ்வர ரெட்டி. என்ன நடந்தது என்பதை முழுமையாக பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர் - தினேஷ் குனகாலா

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் திருப்பதி மலையடிவாரத்தில் நடைபெற்று வருகிறது. இதனால், திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் போக்குவரத்தை தடுத்து நிறுத்திய போலீஸார், வேறு வழியில் போக்குவரத்தை திருப்பி விட்டனர். இதன் காரணமாக திருப்பதி மலைக்கு செல்ல வேண்டிய பக்தர்கள், மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

முக்கிய சாலையில் காலை நேரத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனால், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் முன் பகுதியில் படப்பிடிப்பை நடத்த படக்குழு முற்பட்டனர். அப்போது, அங்கு சாமி கும்பிடுவதற்காக வந்திருந்த பக்தர்கள் வேகவேகமாக படக்குழுவினருடன் வந்திருந்த பவுன்சர்களால் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்த காட்சிகளை தெலுங்கு தொலைக்காட்சி சேனல் ஒன்றின் ஒளிப்பதிவாளர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்த நிலையில், அவரிடம் இருந்து செல்போனை பிடுங்க முயன்ற படக்குழுவினர், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், தனுஷ் நடிக்கும் குறிப்பிட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரி பாஜகவின் ஆந்திர மாநில செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி மற்றும் பத்திரிக்கையாளர் சங்கத்தினர் ஆகியோர் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி பரமேஸ்வர ரெட்டி, போக்குவரத்து இடையூறு, பக்தர்களின் மனநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு படப்பிடிப்பிற்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.