சினிமா

தனுஷ் போலி ஆவணத்தை தாக்கல் செய்ததாக புகார்: நீதிமன்றம் புதிய உத்தரவு

தனுஷ் போலி ஆவணத்தை தாக்கல் செய்ததாக புகார்: நீதிமன்றம் புதிய உத்தரவு

webteam

நடிகர் தனுஷ், போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாகக் கூறி மேலூர் கதிரேசன் தம்பதியினர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் கடந்த 2016 ஆம் ஆண்டு மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில், நடிகர் தனுஷ் எங்களது மகன் பிளஸ் 1 படிக்கும் போது விடுதியில் இருந்து சென்னை சென்று விட்டான். அதன் பிறகு எங்கள் வீட்டிற்கு வரவில்லை. தற்போது நடிகராகிவிட்டார். எனவே எங்களுக்கு ஜீவனாம்சம் தொகை மாதந்தோறும் வழங்க உத்திரவிட வேண்டும் என கூறியிருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு அடிப்படை ஆதாரமற்றது, இதை ரத்து செய்ய வேண்டும் என தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கதிரேசன் தம்பதியனர் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் நடந்த விசாரணையின் போது தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானது. அவை போலியாக தயாரிக்கப்பட்டது. எனவே இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி புதூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தோம். புகாரை பெற்றுக் கொண்ட காவல் அதிகாரி,  பெற்றுக் கொண்டதற்கான எந்தவித ரசீதும் வழங்கவில்லை. புகார் மனு குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்ததேன். அதன் பிறகும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் பிறகு இது குறித்து  நடிகர் தனுஷூக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினேன். இது வரை எந்தவித பதிலும் இல்லை.

எனவே உயர்நீதிமன்ற விசாரணையின் போது நடிகர் தனுஷ் தனது தரப்பில் தாக்கல் செய்த சான்றிதழ்கள் போலியானவை என்ற எனது புகார் குறித்து மதுரை புதூர் காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கோரிக்கை தொடர்பாக தேவையான ஆவணங்களை பதிவாளரிடம் சமர்பிக்க மனுதாரர் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.