இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘அசுரன்’ என்ற படம் மூலம் மீண்டும் இணைகிறார்.
இயக்குநர் வெற்றிமாறன் தனது திரையுலகை‘பொல்லாதவன்’ திரைப்படம் மூலம் தொடங்கினார். ஒரு பைக்கை சுற்றி நடக்கும் பரபரப்பான திரைக்கதையுடன் உருவான அத்திரைப்படத்துக்கு நடிகர் தனுஷ் சரியான தேர்வாக இருந்தார். அதற்கு பிறகு‘ஆடுகளம்’ படத்தை தனுஷை வைத்து இயக்கினார் வெற்றிமாறன். கிராமத்து பின்னணியில் உருவான அத்திரைப்படம் 6 தேசிய விருதைகளை வாங்கியது.
அதற்கு பிறகு தனுஷுடன் வெற்றிமாறன் இணைந்த திரைப்படம் ‘வடசென்னை’. ஒரு இளைஞன் எப்படி கேங்ஸ்ட்ராக உருவாகிறான் என்ற பின்னணியில் இந்தத் திரைப்படம் உருவானது.
‘வட சென்னை’ ஆடியோ விழாவில் பேசிய தனுஷ், இத்திரைப்படத்தை ஒருநேரத்தில் முழுமையாக சொல்ல முடியாது என்பதால் 3 பாகமாக எடுக்க திட்டமிட்டோம். இரண்டாம் பாகத்திற்கான 20 சதவீத காட்சிகள் எங்களிடம் இப்போதைக்கு உள்ளது. அதற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளோம். அதற்கு நடுவில் எங்களுக்கே ‘வடசென்னை’யில் இருந்து ஒரு பிரேக் தேவைப்படுகிறது. ஆகவே நடுவில் நானும் வெற்றிமாறனும் இணைந்து வேறு ஒரு படம் எடுக்க இருக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி வெற்றிமாறனுடனான அடுத்தப் படத்தை அறிவித்துள்ளார் தனுஷ். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘மாரி2’ன் வெற்றி செய்தி பரவிவரும் வேளையில் வெற்றிமாறனுடனான என்னுடைய அடுத்த படத்தை அறிவிக்கிறேன். ‘அசுரன்’ என்ற திரைப்படத்தை தயாரிப்பாளர் தாணுவின் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன், தனுஷ் இருவரின் கூட்டணியில் ஏற்கெனவே உருவான மூன்று படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ‘அசுரன்’ திரைப்படமும் புதிய கதைக்களத்துடன் வரும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.
விவசாயிகளின் தற்கொலையை பற்றி பேசும் ஷூஸ் ஆப் தி டெத் (Shoes Of The Dead) என்ற நாவலுக்கு இயக்குநர் வெற்றிமாறன் ஏற்கெனவே காப்புரிமை வாங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.