சினிமா

"போலீஸ் படங்களை எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன்" இயக்குநர் ஹரி !

"போலீஸ் படங்களை எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன்" இயக்குநர் ஹரி !

jagadeesh

காவல்துறையைப் பெருமைப்படுத்தி 5 படங்கள் எடுத்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன் என்று திரைப்பட இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களது கடுமையான கண்டனங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்த உயிரிழப்பு நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஹரி, இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அதில் "சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்தத் துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக இன்று மிகவும் வேதனைப்படுகிறேன்" என தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் ஹரி காவல்துறையை மையமாக வைத்து "'சாமி', 'சிங்கம்', 'சிங்கம் 2', 'சிங்கம் 3', 'சாமி ஸ்கொயர்' ஆகிய திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.