தீபிகா படுகோனேவின் ஃபிட்னஸ் சேலஞ்ச் தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன் ரத்தோர் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு ட்வீட் செய்திருந்தார். அதில், நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்து அவர்களும் இதுபோல் தங்கள் உடற்தகுதியை நிரூபிக்கும் வகையில் வீடியோ வெளியிட வேண்டும் என சவால் விடுத்திருந்தார்.
இதையடுத்து, ரத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட கோலி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டேக் செய்தார். கோலியின் சவாலை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்தார். விரைவில் தன்னுடைய உடற்தகுதி குறித்த வீடியோவை ட்விட்டர் தளத்தில் பகிர்வேன் எனவும் மோடி பதில் அளித்தார். இதனையடுத்து ஃபிட்னஸ் சேலஞ்ச் தொடர்பான வீடியோவை பிரபலங்கள் பலரும் பதிவு செய்வது பிரபலமானது. அந்தவகையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஃபிட்னஸ் சேலஞ்ச் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பி.வி.சிந்துவின் சேலஞ்சை ஏற்று தீபிகா படுகோனே இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். ஆனால் சமூக வலைத்தளவாசிகள் பலரும் அதனை ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஏனெற்றால் பூங்கா ஒன்றில் ஓடுவது போன்ற பழைய பூமரங்க் வீடியோவை தீபிகா பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த பூமரங்க் வீடியோவால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் அதனை ட்ரோல் செய்து வருகின்றனர். ஃபிட்னஸ் சேலஞ்சை தீபிகா தீவிரமாக எடுக்காமல், விளையாட்டுத் தனமாக எடுத்துள்ளதாக விமர்சித்துள்ளனர். “ இதைத் தான் நீங்கள் ஓட்டம்” என அழைப்பீர்களா எனவும் சிலர் கேட்டுள்ளனர். சிலரோ இது ஏற்கனவே நீங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ வித்யாசமாக உங்களிடம் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் உங்களது ரசிகர்களுக்காக வேறு வீடியோவை பதிவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். சிலரோ தீபிகா படுகோனே, ஃபிட்னஸ் சேலஞ்சை முறையாக ஏற்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் புகார் கூறியுள்ளனர்.