ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து ஆதரவளித்ததன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி உள்ள ‘சபாக்’ திரைப்படம், இன்று வெளியாக உள்ளது.
சர்ச்சைகளும், கடும் விமர்சனங்களும் தீபிகா படுகோனுக்கு புதிதல்ல. ‘பத்மாவத்’ திரைப்படத்தின்போது, தீபிகாவின் தலைக்கு 5 கோடி வரை விலை வைத்தது கர்னி சேனா என்ற அமைப்பு. சூர்ப்பனகைப்போல அவரது மூக்கை அறுக்க வேண்டும் என்றெல்லாம் வன்மையான கருத்துகள் தீபிகாவை நோக்கி வீசப்பட்டன. ஆனாலும் எந்த கடுங்கருத்துகளையும் அவர் புறந்தள்ளியே வந்திருக்கிறார்.
இப்போது அமில வீச்சு பாதிப்புக்கு உள்ளாகி மீண்டு வந்த பெண்ணான லட்சுமியின் கதையை ‘சபாக்’ என்ற திரைப்படமாக அவர் உருவாக்கியுள்ளார். படத்தை தயாரித்துள்ளதோடு, அமில வீச்சுக்கு ஆளான பெண்ணின் பாதிப்புடன் கூடிய முகத்தோடு, தீபிகா படுகோன் நடித்துள்ளார். படத்திற்கான வெளியீட்டு வேலைகளுக்கு மத்தியில் கடந்த செவ்வாயன்று, டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதலுக்கு ஆளாகி போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தீபிகா அங்கு சென்றார்.
அவரின் இந்த செயல், விமர்சனங்களுக்கும், பாராட்டுகளுக்கும் உள்ளாகி இருக்கிறது. ‘சபாக்’ பட விளம்பரத்திற்காகவே அவர் ஜேஎன்யூ சென்றதாக ஒருதரப்பு கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சொந்தத் தயாரிப்புப் படம் வெளியாவதில் சர்ச்சை உருவாகும் என்று தெரிந்த பின்னரும், போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த தீபிகாவின் துணிச்சல் பாராட்டத்தக்கது என்று அனுராக் காஷ்யப், சோனாக்ஷி சின்கா, யஷ்வந்த் சிங் உள்ளிட்டவர்கள் கூறியுள்ளனர்.
‘பாய்காட் சபாக்’ என்றும், ‘சப்போர்ட் சபாக்’, ‘சப்போர்ட் தீபிகா’ என்றும் சமூகவலைதளங்கள் தீபிகாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும், பிளவுப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறது. இதனிடையே எந்த சூழலிலும் நம்மை வெளிப்படுத்திக்கொள்வதில் நாம் அச்சப்படவில்லை என்பது பெருமை தருவதாக தீபிகா பதில் அளித்துள்ளார்.
இந்த நிலையில், ‘சபாக்’ படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த அமிலவீச்சு பாதிப்பிற்குள்ளான லஷ்மியின் வழக்கறிஞர் அபர்ணா பட், திரைக்கதை, படப்பிடிப்பு என பல விதங்களில் தனது பங்களிப்பு இருந்தபோதும் படத்தில் தனக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் வந்தபோது, வழக்கறிஞர் அபர்ணாவுக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே தீபிகா படுகோனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ‘சபாக்’ திரைப்படத்திற்கு முழு வரிவிலக்கு அளிப்பதாக மத்தியப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.