சினிமா

இளையராஜா கருத்துக்கு பதிலடியா? - இன்ஸ்டாவில் என்ன பதிவிட்டார் யுவன் சங்கர் ராஜா

இளையராஜா கருத்துக்கு பதிலடியா? - இன்ஸ்டாவில் என்ன பதிவிட்டார் யுவன் சங்கர் ராஜா

சங்கீதா

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா எழுதிய கருத்து சர்ச்சையான நிலையில், அவரது மகனும், முன்னணி இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது.

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில், புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு, அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இளையராஜாவின் இந்தக் கருத்துகள் கடந்த 2 நாட்களாக சர்ச்சையையும், விவாதத்தையும் தூண்டியிருக்கிறது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், இளையராஜா மீதான விமர்சனத்துக்கு எதிராகவும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக பாராதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜெ.பி நட்டா, தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா, நடிகை குஷ்பூ உள்ளிட்ட பலர், அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இளையராஜா கருத்து தெரிவிக்க உரிமை இல்லையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையில், அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு, தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததாக, அவரது சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், இளையராஜாவின் மகனுமான யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 

தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு உடை அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், 'கருப்பு திராவிடன் பெருமைமிகு தமிழன்' என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.