என்மேல் நம்பிக்கை வைத்து சிவசாமி கேரக்டர் கொடுத்ததற்கு இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
அசுரன் 100-வது நாள் கொண்டாட்டத்தில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “எனக்கு இக்கட்டான சூழ்நிலையில் தாணு உதவியுள்ளார். அதை எப்போதும் மறக்கமாட்டேன். அசுரன் படத்தில் சிவசாமியாக நான் சரியாக செய்வேன் என நம்பிக்கை வைத்ததற்கு வெற்றிமாறனுக்கு நன்றி. அசுரன் பட வெற்றி எல்லோருக்கும் சமம்தான். யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. எனக்கு நிறைய நண்பர்கள் கிடையாது. நான் செய்வது சரி, தவறு என்று சொல்லும் ஒரு சில நண்பர்கள் போதும். அதுபோன்றவர் வெற்றிமாறன். அசுரன் படம் வெளியாகும்போது நான் இங்கு இல்லை” எனப் பேசினார்.
மேலும், “எல்லோரும் படம் நல்லா இருக்குனு சொல்றாங்க அப்படின்னு அம்மாதான் போன் பண்ணி சொன்னாங்க. வெற்றி வரும்போது நான் பக்கத்துல இல்லன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க. ஆனால் கடவுளுக்கு தெரியும், நம்மள எங்க எப்படி வைக்கணும்னு. வெற்றி வரும்போது அதை தூரமாகவே இருந்து ரசிக்கணும். மிகவும் குறுகிய காலகட்டத்தில் வெற்றி மாறன் இந்த படத்தை முடிச்சி கொடுத்தார். ‘கைதி’ படம் வெற்றி பெற்றதும் மிகவும் சந்தோஷமாக இருக்கு. அசுரன், கைதி போன்ற படங்கள் வெற்றியடைவது புது உற்சாகத்தை கொடுக்கிறது” எனத் தெரிவித்தார்.