சினிமா

2023-ம் ஆண்டுதான் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் நஷ்டத்திலிருந்து மீளும் : கிரிசில் அறிக்கை

நிவேதா ஜெகராஜா

கொரோனா காலத்தில் அதிகம் பாதிப்படைந்த துறைகளில் திரைத்துறையும் ஒன்று. இதில், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள்தான் முதலில் மூடப்பட்டவை. இந்த மல்டிபிளக்ஸின் நிலை, 2023 ம் ஆண்டுதான் சரியாகும் என, கிரிசில் (Crisil) நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2020ம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட திரையரங்குகள், கடந்த ஆண்டு இறுதியில்தான் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது மீண்டும் அவை மூடப்பட்டுவிட்டன. திரையரங்குகள் செயல்படத் தொடங்கி 25 சதவீத அளவுக்கு பார்வையாளர்கள் வரத் தொடங்கி இருந்த சமயத்தில் மீண்டும் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதால், நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக, மீண்டும் இரவு நேர ஊரடங்கு, மெட்ரோ நகர்களில் ஊரடங்கு என பல கட்டுப்பாடுகள் தொடங்கிவிட்டன. அதனால் மீண்டும் திரையரங்கம் முடங்கி, திரைத்துறை முடங்கியுள்ளது. 2023-ம் ஆண்டுதான் திரைத்துறை இயல்பு நினைவுக்கு வரும் என கிரிசில் என்ற நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

மகராஷ்டிராவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதால், அங்கு எங்கும் புதிய படங்கள் வெளியாகவில்லை. தியேட்டர் வருமானத்தில் மஹாராஷ்டிராவின் பங்கு அதிகம் என்பதால் அம்மாநிலத்தில் இதர நகரங்களிலும், படத்தை வெளியிட விரும்பவில்லை. மகாராஷ்ட்ரா மட்டுமன்றி, நாடு முழுவதுமே கடந்த நிதி ஆண்டில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. அதேபோல நடப்பு நிதி ஆண்டிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனங்கள் நஷ்டத்தையே சந்திக்கும் என சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு பராமரிப்பு, விரிவாக்க திட்டங்களுக்கான செலவுகளை குறைத்தது என பலவகையில் நஷ்டத்தை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இறுதியில் நஷ்டத்தையே சந்தித்தனர் தியேட்டர் உரிமையாளர்கள். தவிர ஓடிடிகளின் வருகையால் வீட்டில் இருந்தே மக்கள் படம் பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

கோவிட்-19 அச்சம் முழுமையாக குறைவது மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் அதிகளவில் வெளியாவது மட்டுமே, மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மீண்டெழுவதற்கு முக்கியமான வழிகள் என கிரிசில் தெரிவித்திருக்கிறது. இது எப்போது சாத்தியப்படுமோ என வழிமேல் விழி வைத்து, ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் தியேட்டர் நிறுவனர்கள்!