வீரேந்திர சேவாக்-ஆதிபுருஷ்-பாகுபலி Twitter
சினிமா

‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பது இப்போதுதான் புரிகிறது’ - ஆதிபுருஷை பங்கமாய் கலாய்த்த சேவாக்!

ஆதிபுருஷ் படம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

சங்கீதா

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், பாலிவுட் நடிகர்களான சயீஃப் அலிகான், கீர்த்தி சனோன், சன்னி சிங் உள்ளிட்ட பலரின் நடிப்பில் தயாராகியுள்ளப் படம் ‘ஆதிபுருஷ்’. வால்மீகி எழுதிய ராமாயணம் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில், ராமராக நடிகர் பிரபாஸும், ராவணனாக சயீஃப் அலிகானும், சீதாவாக கீர்த்தி சனானும், ராமரின் சகோதரர் லக்ஷமனாக சன்னி சிங்கும் நடித்திருந்தனர்.

Adipurush

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் கடந்த 16-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், கடும் விமர்சனங்களை சந்தித்தது. வசனங்கள், விஎஃப்எக்ஸ் குறைபாடுகள் என அனைத்தும் விமர்சனத்துக்கு உள்ளாகின. கொரோனா காலத்தில் ஜூம் காலில் கதை சொன்னபோது, நடிகர் பிரபாஸ் முதலில் ராமரின் கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கியதாகவும், பின்னர் மும்பையிலிருந்து ஹைதராபாத் சென்று நேரடியாக கதையை விவரித்தப்பிறகே நம்பிக்கை வந்து ராமராக பிரபாஸ் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில், அவ்வப்போது சினிமா, கிரிக்கெட், வைரல் சம்பந்தமான செய்திகளை தனது ஸ்டைலில் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கருத்து சொல்லும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் தற்போது ‘ஆதிபுருஷ்’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி மொழியில் அவர் தெரிவித்துள்ளதாவது, “ஆதிபுருஷ் படத்தைப் பார்த்ததும்தான், கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது புரிகிறது” என்று கருத்து பதிவிட்டுள்ளார். வழக்கம்போல் இதற்கு ஆதரவாகவும், பிரபாஸ் ரசிகர்கள் எதிர்ப்பும் தெரிவித்து ட்ரோல் செய்து வருகின்றனர். கடந்தக் காலங்களில் இந்திய அணியில் தோனி ஏன் உங்களை புறக்கணித்தார் என்று இன்று புரிகிறது உள்ளிட்டவாறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.