வெற்றிமாறன் முகநூல்
சினிமா

'படைப்பாளர்களுக்கு திரையரங்குகளில் உள்ள படைப்பு சுதந்திரம் OTT-ல் இல்லை!' - வெற்றிமாறன் கருத்து

ஜெனிட்டா ரோஸ்லின்

படைப்பாளர்களுக்கு திரையரங்குகளில் உள்ள படைப்பு சுதந்திரம், ஓ.டி.டி.யில் இல்லை என்று கருடன் படத்தின் சக்ஸஸ் மீட்டில் இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் கருடன் படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் குமார், டைரக்டர் துரை செந்தில்குமார், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், சசிகுமார், வெற்றி மாறன், ஒளிப்பதிவாளர் வில்சன், ஆகியோர் கலந்து கொண்டு படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.

இந்தவகையில், இயக்குநர் வெற்றி மாறன் பேசுகையில், படைப்பாளர்களுக்கு திரையரங்குகளில் உள்ள படைப்பு சுதந்திரம், ஓ.டி.டி.யில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், “கருடன் வெற்றிக்கு தமிழ் ஆடியன்ஸ் மீடியாவுக்குதான் வெற்றி. இன்னைக்கு காலத்தில் ஓடிடி நம்பிதான் பிசினஸ்னு இருந்ததை மக்கள் மாத்தியிருக்காங்க. ஒரு சந்தோஷம். இந்த இடத்துக்கு படம் வந்ததுக்கு முக்கியமான காரணம் செந்திலின் உழைப்பு. அப்புறம் புரொடியூசர் குமார்.

அப்புறம் படத்துக்குள்ள வந்த எல்லா ஆர்டிஸ்ட். சூரியோட கமிட்மெண்ட் ரொம்ப நல்லாயிருந்தது. அவருக்கு உடம்பு சரியில்லாம இருந்தது. இருந்தும் நடிச்சு கொடுத்தார். பிரேக் எடுக்கல. நிறைய ரிஸ்க் எடுத்தார். நம்மல சர்ப்ரைஸ் பண்றதுக்கு எப்போதும் சூரி ரெடி.

ஓடிடி, சேட்லைட் போன்றவற்றின் நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையானதை தேவையான நேர்த்தில் வேண்டும் என்றால் அதிக விலைக்கொடுத்து கூட வாங்குவார்கள். ஆனால், ஒரு படைப்பாளராக மக்களிடத்தில் திரையரங்குகளில் வாயிலாக ஒரு திரைப்படத்தை நேரடியாக கொண்டு செல்லும்போது இருக்கும் படைப்பு சுதந்திரம் என்பது ஓடிடி தளங்களின் வாயிலாக கொண்டு செல்லும்போது இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.