போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக கூறப்படும் வழக்கில் நடிகர் தனுஷ் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால் பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தனுஷ் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, இரு தரப்பினரும் தனுஷின் பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ்களை தாக்கல் செய்தனர். விசாரணை முடிவில், கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்து, மதுரை உயர்நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது தனுஷ் தாக்கல் செய்த சான்றிதழ்கள் போலியானவை என்றும், எனவே தனுஷ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.
தன்னுடைய மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி கதிரேசன் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து, நடிகர் தனுஷ் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிக்க:நடிகர் தனுஷ் பெற்றோர் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீராய்வு மனு