சினிமா

‘லிங்கா’ படக் கதை தழுவல் பிரச்னை - படக்குழுவுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு

‘லிங்கா’ படக் கதை தழுவல் பிரச்னை - படக்குழுவுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு

webteam

ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் கதை தழுவல் எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் படக்குழுவினருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘லிங்கா’. இதில் ரஜினி நடித்திருந்த இப்படத்தை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கி இருந்தார். பொன் குமாரன் என்பவர் இப்படத்திற்கான கதையை எழுதியிருந்தார். அணை பிரச்னையை மையமாக வைத்து உருவான இந்தக் கதைக்கு உரிமைக் கோரி ரவி ரத்னம் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு 2014 நவம்பர் மாதம் நீதிமன்றத்திற்கு வந்தது. ‘முல்லைவனம்’ என்ற தனது கதையை ‘லிங்கா’ படக்குழுவினர் தழுவி எடுத்துள்ளதாக அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இதனிடையே ‘லிங்கா’ தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார். அதாவது மதுரை நீதிமன்றத்தில் ‘லிங்கா’ தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கேட்டிருந்தார். மதுரை நீதிமன்றம் ரூ 10 கோடியை வைப்பு தொகையாக கட்டி விட்டு படத்தை வெளியிடலாம் என்றது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் ரஜினி படத் தயாரிப்பாளருக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கியுள்ளது. ’இது போன்ற வழக்குக்குகள் ரஜினி படத்திற்கு வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ‘உண்மை ஒருநாள் வெல்லும்’ என எங்களது படத்தில் இடம்பெற்ற பாடலைப் போலவே இந்தத் தீர்ப்பும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது’ என்று ‘லிங்கா’ படத் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார். இது தொடர்பான செய்தியை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ளது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அனுஷ்கா ஷெட்டி, சோனாக்ஷி சின்ஹா, ஜெகபதி பாபு மற்றும் சந்தனம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.