இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொங்கலை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்ட தமிழ் படங்களை, அடுத்தடுத்து ரிலீஸ் செய்யும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் என்ற புதியவகை கொரோனா வைரஸ், இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் 2-ம் தேதி 2 பேருக்கு கண்டறியப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், மறுபுறம் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் தினசரி பாதிப்பு 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி, 3-வது அலை உருவானது. தமிழகத்திலும் ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த கொரோனா தினசரி பாதிப்பு, திடீரென 30 ஆயிரத்தை தாண்டியது.
கொரோனா பாதிப்பு உயர்வால், கடந்த ஜனவரி 7-ம் தேதி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கும் பிறப்பித்தது. எனினும், முதல் இரண்டு அலைகளில் திரையரங்குகள் மூடப்பட்டதுபோல் இல்லாமல், 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடுகளால் வசூல் பாதிக்கும் என்பதால், பொங்கலை முன்னிட்டு வெளியிடும் நிலையில் இருந்த, அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் உள்ளிட்ட பெரும்பாலான படங்கள் தள்ளிவைக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது 3 வாரங்களுக்குப் பிறகு இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். அந்தவகையில், விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு, பின்னர் ஜனவரி 26-ம் தேதி குடியரசுத் தினவிழாவிற்கு வெளியிட படக்குழு தயாராகினர். ஆனால் அப்போதும் கொரோனா பரவலால், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 4-ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதேபோல், விஜய்சேதுபதியின் ‘கடைசி விவசாயி’, விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்.’ உள்ளிட்ட படங்கள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ திரைப்படம் மார்ச் 25-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்ப்புகள் நிறைந்த நடிகர் அஜித்தின் நடிப்பில், வினோத் இயக்கத்தில் பொங்கல் தினத்தில் ஒத்திவைக்கப்பட்ட ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ மார்ச் 11 அல்லது மார்ச் 18-ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் மார்ச் 18 அல்லது 25-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் மாஸ் திரைப்படமான ‘பீஸ்ட்’, யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ஆகிய படங்கள் ஏப்ரல் 14 சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கார்த்தியின் விருமன் திரைப்படம் மே அல்லது ஜூனில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மாஸ் பட்ஜெட் படங்கள் முதல் சிறு பட்ஜெட் படங்கள் வரை அடுத்தடுத்து வெளியாவதால் ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.