சினிமா

‘2019’ - தமிழ் சினிமாவில் ‘டாப் 10’ சர்ச்சைகள்

‘2019’ - தமிழ் சினிமாவில் ‘டாப் 10’ சர்ச்சைகள்

webteam

சினிமாவையும் சர்ச்சையையும் பிரிக்கவே முடியாது. இந்த ஆண்டு சினிமா வட்டாரங்கள் பஞ்சம் இல்லாத அளவுக்கு சண்டைகள், சர்ச்சைகள், மோதல்களால் நிரம்பி வழிந்தன. யார் ? யார் ? எல்லாம் சர்ச்சை சர்க்கஸில் சிக்கினார்கள்? கொஞ்சம் லேசாக கோலிவுட் கூடாரத்தை ஒரு ரவுண்ட் அடித்து பார்க்கலாம்.

டாப் 1

இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் ஆரம்பித்த முதல் சர்ச்சை, ரஜினியின் ‘பேட்ட’ அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களின் ரசிகர்களிடையே நடந்த மோதல்தான். கடந்த ஜனவரி மாதம் 10 தேதி பொங்கல் பண்டிகையை முன்வைத்து இரு படங்களும் திரைக்கு வந்தன. அதிகாலையிலேயே ‘விஸ்வாசம்’ ரசிகர்கள் திரையரங்கத்தில் தீயாய் வேலை செய்ய ஆரம்பித்தனர். அதே போல ‘பேட்ட’ ரஜினியின் ரசிகர்களும் குவிந்தனர். இதில் எந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி என ட்விட்டரில் யுத்தம் ஆரம்பித்தது. பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்து இந்தச் சர்ச்சையை தொடர வேண்டாம் என ‘பேட்ட’ தயாரிப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டது. வழக்கமாக அஜித், விஜய் ரசிகர்கள் மோதல்களால் நிரம்பி வழியும் சமூக ஊடகங்கள் இந்த ஆண்டு ரஜினி, அஜித் ரசிகர்கள் இடையே ஆன யுத்தமாக மாறியது. ஆக, இரு நடிகர்களின் ரசிகர்களால் இந்த ஆண்டின் தொடக்கமே பெரும் சர்ச்சையாக மாறி போய் இருந்தது.

டாப் 2

2019 சர்ச்சையில் பெரிய சர்ச்சை நயன்தாரா பற்றியதுதான். அரசியல் மேடைகளில் பேச்சாளராக வலம் வந்த நடிகர் ராதா ரவி, ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ட்ரெயலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி இருந்தார். அந்தப் படத்தில் நாயகியாக நயன்தாராவே நடித்திருந்தார். வழக்கம் போல் நயன் அந்த விழாவுக்கு வரவில்லை. அதை வைத்து விமர்சிக்க தொடங்கிய ராதாரவி, தனிப்பட விஷயங்களை பற்றியும் பேசினார். ஆகவே அவரது கருத்து சினிமா வட்டாரத்தை தாண்டி ஒட்டுமொத்த பெண்கள் மத்தியில் சர்ச்சையாக உருமாறியது. இறுதியில் அவர் சார்ந்திருந்த திமுக மேல் மட்டத்திற்கு போனது. அதை வைத்து ராதா ரவியை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கினர். அதை கொண்டு பிரச்னை மேலும் வலுத்தது.

டாப் 3

இந்த ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜா பேசிய பேச்சுக்கு சினிமா வட்டாரத்தில் எந்த எதிர்ப்பும் எழவில்லை. ஆனால் அவர் கூறிய கருத்தை வைத்து நெட்டிசன்கள் பெரிய அளவில் பொங்கி விட்டனர். ‘96’ படத்தில் தன்னுடைய பாடல்கள் பயன்படுத்தி இருப்பது தொடர்பாக பேச வந்த இளையராஜா, “இது தவறான விஷயம். 80, 90 காலகட்டங்களில் இடம்பெறும் பாடல் என்றால் ஏன் நான் இசையமைத்த பாடல்களை வைக்கவேண்டும்?. அந்தப்படத்தின் இசையமைப்பாளரே அந்தக் காலத்திற்கு ஏற்றார்போல ஒரு பாடலை இசையமைக்க முடியாதா?. இது அவர்களின் திறமையின்மை மற்றும் ஆண்மை இல்லாத தனத்தைதான் காட்டுகிறது” எனக் கூறியிருந்தார். உடனே இயக்குநர் மற்றும் இசையமைப்பாளருக்கு ஆதரவாக களம் இறங்கிய நெட்டிசன்கள் இளையராஜா ஹிந்தி உட்பட எந்தெந்த படங்களில் இருந்து பாடல்களை தழுவி இசையமைத்துள்ளார் என தனி வீடியோவையே வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.

டாப் 4

நடிகை ஓவியா நடித்திருந்த ‘90எம்எல்’ படம் குறித்து பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இந்தப் படத்தில் ஓவியா கொஞ்சம் எல்லை மீறி நடித்திருப்பதாக பலரும் குற்றம் சுமத்தினர். மேலும் படத்தில் பெண்கள் சிகரெட் பிடிப்பது, தண்ணி அடிப்பது போன்ற காட்சிகளை வைத்ததற்கு பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அதற்கு எல்லாம் உரிய முறையில் விளக்கம் அளித்தார் படத்தின் இயக்குநர் அனித உதீப். ஆனாலும் சர்ச்சை அடங்க கொஞ்சம் நாட்கள் வரை ஆனது.

டாப் 5

இந்த ஆண்டு கடும் நிதி நெருக்கடியால் சில படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பின்பும் திரைக்கும் வரவில்லை. அதர்வா நடிப்பில் உருவான ‘100’ , விஷால் நடித்திருந்த ‘அயோக்யா’, ஜீவா நடித்திருந்த ‘கீ’ ஆகிய மூன்று படங்களும் பணப் பிரச்னையால் திரைக்கு வருவதாக அறிவித்த பிறகும் தள்ளித் தள்ளி போயின. பலர் டிக்கெட் எடுத்து கொண்டு ‘அயோக்யா’விற்கு திரையரங்க வாசலில் காத்திருந்தனர். இறுதி நேரத்தில் படம் வராது எனக் கூறியதால் செய்வது அறியாமல் வெளியேறினர். இறுதியில் விஷால் தன் படம் வெளியீடு குறித்து ட்விட்டரில், “நான் கடினமாக வேலை செய்த ‘அயோக்யா’ வெளியாகக் காத்திருக்கிறேன். ஒரு நடிகராக என்ன செய்ய வேண்டுமோ அதைத் தாண்டியும் நான் செய்துவிட்டேன். இது போதாதா? என்னுடைய நேரமும் வரும்” என்று குறிப்பிட்டிருந்தார். கோடி கணக்கில் பணம் புரலும் சினிமா துறைக்குள்ளும் பணப் பிரச்னையா என ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு போன அதிசயம் திரைத்துறையில் இந்த ஆண்டு நடந்தது.

டாப் 6

தெலுங்கில் வெளியாகி சக்கைப் போடு போட்ட திரைப்படம் ‘அர்ஜூன் ரெட்டி’. இந்தப் படத்தின் தமிழ் உரிமையை யார் பெறுவது என்பதில் தொடங்கியது போட்டி. இறுதியில் விக்ரம் மகன் துருவை வைத்து பாலா இந்தப் படத்தை இயக்குவதாக முடிவானது. ஆனால் அதிலும் பாதியில் சிக்கல். ‘அவர் நாங்கள் நினைத்ததை போல படத்தை எடுக்கவில்லை’ எனக் கூறி பாலாவை படத்தில் இருந்து நீக்கியது தயாரிப்பாளர் தரப்பு. பாலாவும் மிக அமைதியாக படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அதன் பிறகு வேறு புதிய இயக்குநரை அமர்த்தி படத்தை முடித்து வெளியிட்டனர். முதலில் ‘வர்மா’வாக தொடங்கிய இந்தப் படம் திரைக்கு வரும்போது ‘ஆதித்ய வர்மா’ என மாறி இருந்தது.


டாப் 7

மிக தைரியமான கதாபாத்திரத்தில் அமலா பால் இந்த ஆண்டு நடித்திருந்த திரைப்படம் ‘ஆடை’. அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடர்பாக கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இயக்குநர் ரத்னகுமார் இதனை இயக்கி இருந்தார். ஆடை என்ற தலைப்புக்கு தகுந்தவாறு அமலாவின் ஆடை அலங்காரம் லேசான எதிர்ப்பை ஏற்படுத்தியது. அது குறித்து விளக்கங்களும் படக்குழு தரப்பில் வைக்கப்பட்டன. அமலா பால் தனது படங்களில் மிக முக்கியமான படமாக இதனை குறிப்பிட்டார். ஆனால் இறுதியாக இப்படம் வெளியாவதில் பண நெருக்கடி இருந்ததாக கூறப்பட்டது. ஆகவே வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்றும் பேசப்பட்டது. இறுதியாக படம் வெளியாக அமலா பால் தனது கணக்கில் இருந்து பணம் கொடுத்து உதவியதாகவும் பேச்சு அடிப்பட்டது. படம் வெளியான பின்பு விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதால், எதிர்ப்பு சற்றே குறைந்தது.

டாப் 8

நடிகர் ஜெயம் ரவி நடித்திருந்த ‘கோமாளி’ ட்ரெய்லர் இந்த ஆண்டு சர்ச்சையை கிளப்பிய விஷயங்களில் ஒன்றாக இருந்தது. இந்தப் படத்தில் பழைய விஷயங்களை மறந்துவிடும் நபராக ரவியின் பாத்திரம் அமைக்கப்பட்டது. ஆகவே ட்ரெய்லரில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து விமர்சனபூர்வமான கருத்து ஒன்று பேசப்பட்டிருந்தது. அதை பார்த்த ரஜினியின் ரசிகர்கள் மிக கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். ஆகவே ட்ரெய்லர் எதிர்பார்த்ததைவிட சர்ச்சையானது. இறுதியில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்குவதாக அறிவித்தனர்.


டாப் 9

கதை திருட்டு, அல்லது வேறு பிர்சனை, அல்லது தலைப்பில் பிரச்னை என ஏதாவது ஒன்றில் விஜய் படம் சிக்குவது வாடிக்கை. இந்த முறை ‘பிகில்’ படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. உதவி இயக்குநர் செல்வம் இந்தப் படத்தின் கதைக்கு உரிமை கோரி நீதிமன்றம் சென்றார். இறுதியில் படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்தப் பிரச்னை முடிந்ததும் படம் வெளியாவதில் சிக்கல் வந்தது. சிறப்புக் காட்சிக்கான அனுமதி இல்லை என்பதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ரசிகர்கள் களத்தில் குதித்தனர். விஜய்க்கு ஆதரவாக சில இடங்களில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. கிருஷ்ணகிரியில் படம் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டதால் அடிதடி நடந்தது. 30 க்கும் அதிகமான நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


டாப் 10

சில காலமாக வெளிவராமல் முடங்கிக் கிடந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் வெளிவரும் சந்தோஷத்தில் இயக்குநர் கவுதம் மேனன் ஒரு ட்வீட் போட்டார். அதில், “இந்த சீசன் சீயான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியாகாமல் முடிவுக்கு வராது. ஏனெனில் இது என் இதயத்திற்கும் நெருக்கமானது. சீயான் விக்ரமுடன் வேலை செய்தது மிகப்பெரிய நேர்மறையான அனுபவம். இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் இன்னும் 60 நாட்களில் முடிந்துவிடும். விரைவில் படம் வெளியாகும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதனை தொடர்ந்து இளம் இயக்குநர் கார்த்திக் நரேன், “எனக்கு சில விளக்கம் தேவை. எப்போது என் படம் வெளிச்சத்திற்கு வரும் என தெரிந்தால் உதவியாக இருக்கும் சார். இந்தப் படம் என் இதயத்திற்கு மிகமிக நெருக்கமானதுதான்” என்று கவுதம் ட்வீட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார். அந்தக் கருத்து சினிமா வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையானது.