vijay pt web
சினிமா

தெலுங்கில் ரிலீஸ்-க்கு சிக்கல்.. லியோவை சுழற்றி அடிக்கும் சூறாவளி.. ஒரே நேரத்தில் இத்தனை பிரச்னைகளா?

Angeshwar G

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் செப் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல் காட்சிகள் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் புதிய புதிய சிக்கலும் நாளுக்கு நாள் வந்த வண்ணம் தான் உள்ளது.

லியோ படம்

இந்நிலையில், அக்டோபர் 19ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நாள்தோறும் 5 காட்சிகளை திரையிடலாம் என்றும், முதல் காட்சியை காலை 9 மணிக்குதான் திரையிட வேண்டுமென்றும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், அதிகாலை 4 மணி சிறப்பு காட்சி வேண்டும். அப்படி இல்லையென்றாலும் காலை 7 மணிக்கு முதல் காட்சியை திரையிட அனுமதிக்க வேண்டுமென செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தது.

அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை

இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் நீதிபதி, “ரசிகர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது. அதேபோல் படம் வெளியிடுவதே ரசிகர்களின் விருப்பத்திற்காகதான். அதனால் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை. காலை 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு அரசை அணுகலாம். அதன் மீது நாளை மதியத்திற்குள் அரசு முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கு முழுமையாக முடித்து வைக்கப்பட்டது.

இதனிடையே, லியோ படத்திற்காக முதல் காட்சியை காலை 7 மணி முதல் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுற்த்தி தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதாவை லியோ பட தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர்கள் குழு நேரில் சந்தித்து மனு அளித்துள்ளது.

திருப்பூர் சுப்பிரமணியம்

லியோ - திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சிக்கல்

இது ஒருபுறம் இருக்க, தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பிற்கும் பங்கு தொகை சதவீதத்தில் உடன்பாடு ஏற்படாததால் லியோ திரைப்படத்தை வெளியீடு செய்வதில் சில திரையரங்குகளில் சிக்கல் நிலவிவருவதாக திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி. ஐந்து காட்சிகளே எங்களுக்கு போதுமானது. இருப்பினும் படம் ஓடும் நேரம், அடுத்தடுத்த காட்சிகளுக்கு திரையரங்கை சுத்தம் செய்ய எடுத்து கொள்ளும் நேரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இரவு 1.30 என்பதில், இன்னும் கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைக்கிறோம்.

LEO

தியேட்டரில் இனி ’நோ’ ட்ரெய்லர்!

திரைப்படத்திற்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்பது வழக்கத்தில் உள்ள நடைமுறைதான். லியோ படத்தின் மூலமாக அது வெளியில் தெரிந்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் நான்கு மணி காட்சிகளை திரையிடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தமிழகத்தில் 1168 திரையரங்குளில், ஒரு சில திரையரங்குகள் ட்ரெய்லர் திரையிடும் செயல்களில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் திரையரங்குகளும் ரசிகர்களால் பாதிப்படைகிறது. எனவே இனிவரும் காலங்களில் திரையரங்குளில், ட்ரெய்லர் திரையிடுவதில்லை என முடிவு செய்துள்ளோம்.

லியோ - வெளியீட்டில் சிக்கல்

மேலும் புது நடைமுறையாக பண்டிகை அல்லாத நாட்களில் சிறப்பு காட்சி அனுமதி லியோ திரைப்படத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும் லியோ திரைப்படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்களிடம் 80 சதவீதம் வரை பங்கு தொகை கோருவதால், தயாரிப்பு தரப்புக்கும், திரையரங்கு உரிமையாளர்கள் தரப்புக்கும் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இதன் காரணமாக திரையரங்குகளில் லியோ திரைப்படத்தை வெளியீடுவதில் தற்போது வரை சிக்கல் நிலவி வருகிறது” என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கிலும் ரிலீஸ் நிறுத்தி வைப்பு

'லியோ' படத் தலைப்பு தெலுங்கில் ஏற்கனவே பதிவு செய்திருப்பதாக சொல்லி சிக்கல் எழுந்திருக்கிறது. எனவே படத்தை அக்டோபர் 20 வரை வெளியிடத் தடை என தெலுங்கான உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த லியோ தெலுங்கு விநியோகஸ்தர் நாக வம்சி,"தலைப்பு தொடர்பான பிரச்சனை இன்று காலையில் தான் எனக்கே தெரிய வந்தது. 'லியோ' தலைப்பு தொடர்பான சிக்கலை சம்பந்தப்பட்ட நபருடன் பேசி யாருக்கும் நஷ்டம் ஏற்படாமல் தீர்ப்போம். லியோ தெலுங்குப் பதிப்பு அக்டோபர் 19 உறுதியாக வெளியாகும்." என்றார்.

”அரசின் தலையீடு இல்லை”

லியோ பட விவகாரத்தில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என தமிழக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

லியோ படம் தொடர்பாக சமீபகாலமாக சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.