சினிமா

”கோட்சேவை ஹீரோவாக சித்தரிப்பதா?” - ‘நான் ஏன் காந்தியை கொன்றேன்’ படத்தை தடைசெய்ய கோரிக்கை

”கோட்சேவை ஹீரோவாக சித்தரிப்பதா?” - ‘நான் ஏன் காந்தியை கொன்றேன்’ படத்தை தடைசெய்ய கோரிக்கை

Veeramani

‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ திரைப்படத்தைத் தடை செய்யுமாறு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுக்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே, காந்தியை கொலை செய்ததற்கான காரணத்தை விளக்கி சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உலகளாவிய பிம்பமான மகாத்மா காந்தியின் கொலையாளியை ஹீரோவாக சித்தரித்தால் அதை ஏற்க முடியாது, எனவே இப்படத்தை தடை செய்யவேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தேசத் துரோகி மற்றும் கொலையாளியான நாதுராம் கோட்சேவை புகழ்ந்துரைக்கும் திரைப்படத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் (AICWA) கடிதம் எழுதியுள்ளது. "காந்திஜி இந்தியா மற்றும் உலகத்தால் போற்றப்படும் ஒருவர், காந்திஜியின் சித்தாந்தம் ஒவ்வொரு இந்தியருக்கும் அன்பு மற்றும் தியாகத்தின் சின்னமாக உள்ளது. நாதுராம் கோட்சே இந்த நாட்டில் யாருடைய மரியாதைக்கும் உரியவர் இல்லை, நாதுராம் கோட்சேவாக நடித்த நடிகர் மக்களவை எம்.பியாக உள்ளவர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுதிமொழிக்கு உட்பட்டவர்" என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படும் காந்தியின் நினைவு தினமான ஜனவரி 30 அன்று ஓடிடியில் 'Why I killed Gandhi' திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கோட்சேவாக முன்னணி மராத்தி நடிகரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான அமோல் கோல்ஹே நடித்துள்ளார். தற்போது இவருக்கு உட்கட்சி மற்றும் பிற கட்சிகளில் இருந்து கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது,