சினிமா

“நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்”: கேரள நடிகைகளுக்கு குவிகிறது ஆதரவு

“நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்”: கேரள நடிகைகளுக்கு குவிகிறது ஆதரவு

Rasus

மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னணி நடிகைகள் சிலர் அந்த அமைப்பிலிருந்து விலகியுள்ளனர். இந்நிலையில் அந்த நடிகைகளுக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ (Association of Malayalam Movie Artists) . இதன் புதிய தலைவராக மோகன்லால் சமீபத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில் சிக்கிய பிரபல நடிகர் திலீப் ‘அம்மா’வில் மீண்டும் சேர்க்கப்பட்டார். கடந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கிய நேரத்தில் திலீப் அந்த அமைப்பிலிருந்து விலக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட  நடிகை அந்த அமைப்பிலிருந்து உடனடியாக விலகினார். எனவே அந்த நடிகைக்கு ஆதரவாக அவரின் தோழியான மற்ற மூன்று நடிகைகளும் ‘அம்மா’விலிருந்து வெளியேறினர். ‘அம்மா’ பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்பதே அவரின் குற்றச்சாட்டு ஆகும். இந்நிலையில் ‘அம்மா’விலிருந்து விலகிய நடிகைகளுக்காக சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

இதுதொடர்பாக வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான ஹரிஷ் வாசுதேவன் ஸ்ரீதேவி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ எந்த நடிகர்களை நாங்கள் விரும்பி பார்த்து அவர்களை ஸ்டாராக மாற்றினோமோ அவர்களே இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். அமைப்பிலிருந்து விலகிய நடிகைகள் அனைவரும், தங்களுக்கு ஊதியம் சரிவர வரவில்லையென்றோ, தனிப்பட்ட சுய காரணங்களுக்காகவே விலகவில்லை. மலையாள சினிமா உலகில் அனைத்து பெண் நட்சத்திரங்களும் மரியாதையுடனும், சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பதவி விலகியுள்ளனர். ‘அம்மா’வில் இன்னும் தொடரும் நடிகர்களின் படங்களை நான் இனிமேல் பார்க்கப் போவதில்லை. என் நண்பர்களையும் அவர்களின் படங்களை பார்க்க வேண்டாம் என வலியுறுத்த போகிறேன். ‘அம்மா’வின் முடிவிற்கு எதிராக எந்த நடிகர்கள் குரல் கொடுக்க போகிறார்களோ அவர்களின் படங்களையே இனி பார்க்க போகிறேன். இத்தகைய நடிகர்கள் முறைப்படி வருமான வரி தாக்கல் செய்கின்றனரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதேபோல பத்திரிகையாளர் சரஸ்வதி நாகராஜனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதில் “ தைரியமான பெண்கள். நாங்கள் உங்களுடன் எப்போதும் துணை இருப்போம்” என கூறியுள்ளார். இதேபோல மூத்த பத்திரிகையாளராக ஷகினா போன்றோரும், ‘அம்மா’விலிருந்து விலகிய நடிகைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் மலையாள திரை உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.