’நாதமா.. பரதமா’ என்கிற காலம்போய், ’இசையா.. மொழியா’ என்கிற விவாதம்தான் தற்போது கோலிவுட் கூடாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. ஆம், தமிழ்த் திரையிலகில் இசையிலும் மொழியிலும் இரு லெஜண்ட்களாக இருக்கும் இளையராஜா மற்றும் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் எதிராகவும்தான் தற்போது அதிக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்குப் பிறகு தமிழ் இசை உலகை ஆண்ட இசையமைப்பாளர்களில் முதன்மையானவர் என்றால், அது இளையராஜாதான். அதில் எந்தச் சந்தேகமுமில்லை. 1980-90களில் அவர் இசையமைத்த பாடல்கள் இன்றும் தேவாமிர்தம்தான்.
அதுபோல் அக்காலத்தில் கவித்துவத்துடன் வரிகள் எழுதியவர் வைரமுத்து. அவர் எழுதிய நிறைய பாடல்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.
இவ்விருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடைப் பயன்படுத்தி, சாதாரண ஒரு விவகாரத்தைப் பெரியளவில் பூதாகரமாக்கிப் பார்க்கிறது, சினி உலகம். முதலில் இளையராஜா - வைரமுத்து விஷயத்தில் நடப்பது என்பதை இங்கு புரிந்துகொள்ள வேண்டும்.
"பட வாய்ப்புகள் நிறைந்ததால், உரிய நேரத்தில் தமக்கு பாடல் எழுதி தரவில்லை" என்று இளையராஜா தரப்பாலும்,
“இளையராஜா வேண்டுமென்றே எம் பாடல் வரிகளை மாற்றிக்கொள்கிறார்” என வைரமுத்து தரப்பாலும்
சொல்லப்பட்ட தகவல்களாலேயே, இந்த இரண்டு லெஜண்டுகளும் பிரிந்ததாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதற்குப் பிறகு இருவரும் தனித்தனி திசையில் பயணிக்க ஆரம்பித்தனர். இவர்களை இணைத்துவைக்க திரைத்துறை முயற்சித்தபோதிலும், ஆனால், அதற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த 2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் பழம்பெரும் பின்னணிப் பாடகி பி.சுசீலா திரைத்துறைக்கு வந்து 65-வது ஆண்டுகள் ஆனதையொட்டி, 'சுசீலா- 65’ விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நீண்டவருடங்கள் கழித்து இளையராஜா - வைரமுத்து என்ற இருதுருவங்களும் மேடையில் பங்கேற்றபோது, அங்குள்ளவர்களை மட்டுமின்றி, திரைத்துறையையே திரும்பிப் பார்க்க வைத்தது.
இருவரும் மேடையில் இணைந்து பேசுவார்கள் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இரவும் பகலும், சூரியனும் சந்திரனும், கிழக்கும் மேற்கும் ஆகியன எப்போதும் இணையாது என்பதைப்போலவே இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவுமில்லை, பேசிக்கொள்ளவுமில்லை.
இந்த விழாவில் 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' பாடல் வரிகள் குறித்தும், சுசீலா பாடியது குறித்தும் குறிப்பிட்டுப் பேசிய இளையராஜா, "இன்றைக்கும் இந்தப் பாடலின் வரிகள் இந்த இளைஞர்களுக்கு எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். கவிஞர் கண்ணதாசனை போல ஒரு கவிஞன் இந்த உலகத்தில் கிடையவே கிடையாது. பாடல் சொன்னவுடன் வரிகளைச் சொன்னவர்கள், இந்த உலகத்திலேயே ஒருவரும் கிடையாது” எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய வைரமுத்து, “உலகத்தில் சிறந்த கவிஞன் கண்ணதாசன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தில்லை. ஆனால் உலகத்தில் சிறந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை” என ஆவேசமாகப் பேசிப் பதிலடி கொடுத்தார். இருவரின் இந்த மேடைப்பேச்சும், அவர்கள் மீண்டும் திரையுலகில் இணைய வாய்ப்பு இல்லை என்பதை உணர்த்தியது.
இந்த நிலையில், மறைந்த பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம், திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்தவகையில், கனடா, ரஷியா, மலேசியா, சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திவந்தார். அப்போது, “இனிமேல், இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதியில்லாமல் யாரும் பாடக்கூடாது. மீறினால், காப்புரிமை சட்டத்துக்கு எதிராக அபராதம் செலுத்தக் கூடும்” என எஸ்.பி.பி. உள்ளிட்ட பாடகர்களுக்கு இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு எஸ்.பி.பி. தரப்பில், “இனிமேல், இளையராஜா பாடல்களை பாடமாட்டேன். இனிமேல், இதுதொடர்பாக அறிக்கை மற்றும் கருத்து பதிவிட வேண்டாம்” என்று எஸ்பிபி அறிக்கை வெளியிட்டார். ஆனால் பின்னர், ”என்மீது நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை. இளையராஜா பாடல்களைப் பாடுவேன்” என எஸ்பிபி கூறினார்.
பின்னர், 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்கள் இணைந்ததும் எஸ்.பி.பியின் மறைவுக்குப் பிறகு இளையராஜா ஆறுதல் கூறியதும் வேறுகதை. இதற்கிடையே எஸ்.பி.பி. விவகாரத்தின்போது இளையராஜா இசையமைத்த படங்களின் தயாரிப்பாளர்களும், ராயல்டி தொகையில் தங்களுக்கும் பங்கு தரவேண்டும் என கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவையாவும் கடந்தகால கதைதான். சரி, தற்போதைய விஷயத்துக்கு வருவோம்.
இசைஞானி இளையராஜா தரப்பில் அண்மையில் நீதிமன்றத்தில் “இரண்டு நிறுவனங்கள், நான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த என்னிடம் ஒப்பந்தம் போட்டிருந்தது. ஆனால் அது முடிந்தபிறகும், சட்டவிரோதமாகப் பாடல்களைப் பயன்படுத்தி வருகின்றன. அதற்குத் தடை விதிக்க வேண்டும். பாடலுக்கான முழுஉரிமையும் இசையமைப்பாளருக்குத்தான்” என்று உரிமைகோரி வாதிட்டது மிகப்பெரிய பேசுபொருள் ஆனது.
அந்த வழக்கில் நீதிமன்றமே, ‘பாடல் வரிகள் இல்லை என்றால், பாடலே இல்லை; அப்படி இருக்கும்போது பாடலாசிரியரும் உங்களைப்போல் பாடலுக்கு உரிமை கோரினால் என்ன ஆகும்?’ என கேள்வி எழுப்பி இருந்தது. இதன்பின்னரே, பாடல் யாருக்குச் சொந்தம் என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் மட்டுமல்ல, பெரிய தலைகள்வரை பேசுமளவுக்குச் சென்றது.
இந்த விவகாரம் குறித்து ‘படிக்காத பக்கங்கள்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வைரமுத்து, “ஒரு பாடலில் ‘இசை பெரிதா... மொழி பெரிதா’ என்பது பெரும் சிக்கலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் என்ன சந்தேகம் வேண்டும்? இசை எவ்வளவு பெரிதோ, மொழி அவ்வளவு பெரிது. இரண்டும் கூடினால்தான் அதற்குப் ’பாட்டு’ என்று பெயர்.
சிலநேரங்களில் இசையைவிட மொழி உயர்ந்ததாகவும், சில நேரங்களில் மொழியைவிட இசை உயர்ந்ததாகவும் திகழுகிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப் புரிந்துகொள்பவன் ஞானி, புரிந்துகொள்ளாதவன் அஞ்ஞானி” என இளையராஜாவை சூசகமாகச் சாடியிருந்தார்.
வைரமுத்து இப்படி, இளையராஜாவை மறைமுகமாகச் சாடியிருந்ததைக் கண்ட அவரது சகோதரர் கங்கை அமரன், “கவிஞர் வைரமுத்து எங்களால் தூக்கிவிடப்பட்டவர். எங்களால் லிஃப்டில் ஏறி பாட்டு எழுதியவர். அவர் உட்கார்ந்த சேரை தூக்குப் போட்டு மிதிப்பது போல பேசியிருக்கார்.
அவர் இப்போது வாழும் வாழ்வை, எடுத்த பேரை எல்லாம் நினைத்துப் பார்தோம் என்றால், அவர் எதிர்காலமே ஜீரோ ஆகியிருக்கும். வைரமுத்து அவர்களை வாழவைத்த இளையராஜாவை, போட்டோ வைத்து அவர் கும்பிட வேண்டும். இனிமேல் வைரமுத்து அவர்களே.... இளையராஜா குறித்து நீங்கள் குற்றங்களோ குறைகளோ சொல்வதாக இருந்தால், அதன் விளைவுகளை நீங்கள் வேறமாதிரி சந்திக்க நேரிடும்” என எச்சரித்திருந்தார்.
தொடர்ந்து வைரமுத்துவும் சும்மா இருக்கவில்லை. மே தினம் அன்று, கவிதை ஒன்றைப் பகிர்ந்து, “இந்த பாட்டு இசையமைத்த இளையராஜாவுக்கோ, வரிகள் எழுதிய எனக்கோ, பாடிய ஜேசுதாஸூக்கோ மட்டும் சொந்தமில்லை. இது அத்தனை தொழிலாளர்களுக்கும் சமர்ப்பணம்” என தெரிவித்திருந்தார். இது இளையராஜா, கங்கை அமரனுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து இந்த விவகாரத்தில் கங்கை அமரனுக்கு ஆதரவாகச் சிலரும் வைரமுத்துவுக்கு ஆதரவாகச் சிலரும் தங்கள் கருத்துகளைக் கூறி வருகின்றனர். மொத்தத்தில் இருவர் கூறிய கருத்துகளுமே தவறு என்ற நோக்கிலேயே அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“ ‘புரிந்துகொள்ளாதவன் அஞ்ஞானி’ என வைரமுத்து பேசியதும் தவறு; ’வைரமுத்துவை வளர்த்துவிட்டதே இளையராஜாதான்’ என கங்கை அமரன் பேசியதும் தவறு ” என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது.
இதற்கிடையே இளையராஜாவை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம், “நான் இளையராஜாவை அறிமுகப்படுத்தாவிட்டால் வேறொரு தயாரிப்பாளர் அவரை அறிமுகப்படுத்தி இருப்பார்” என முன்பொருமுறை தெரிவித்தது இப்போது பேசுபொருளானது. அதை குறிப்பிட்ட பலரும் “வைரமுத்துவை இளையராஜா அறிமுகப்படுத்தாமல் இருந்தால், அவர் வேறொரு இசையமைப்பாளர் மூலம் திரையுலகுக்கு வந்திருப்பார்” என வாதம் வைத்தனர். இப்படி இருதரப்பு வாதமும் சூடுபிடித்தது.
இது ஒருகட்டத்தில், ‘இசை பெரிதா... மொழி பெரிதா’ என்கிற விவாதமே மறுக்கப்பட்டு, ‘யாரால் யார் வளர்ந்தது’, ‘நீயா... நானா’ என்கிற ஈகோவும் பழைய கதைகளும் எடுத்தாளப்படுவதாக நெட்டிசன்கள் குறைகூறுகின்றனர்.
வைரமுத்து - இளையராஜா ஒருபுறமிருக்க, மறுபுறம் வைரமுத்து - கங்கை அமரன் என்கிற விவாதம்தான் தற்போது பேசுபொருளாகி வருகிறது. இதற்குத் தகுந்தாற்போல் வைரமுத்துவும் மீண்டும் பதிலடி கொடுத்திருப்பது இணைய உலகுக்கு தீனி போட்டதுபோல் ஆகியிருக்கிறது.
அதன்படி நேற்று முன்தினம் வைரமுத்து, ‘குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும்; புயல் வீசத் தொடங்கிவிட்டால் ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும்; வெள்ளம் படையெடுக்கத் தொடங்கிவிட்டால் நாணல் நதிக்கரையில் தலைசாய்த்துக் கொள்ள வேண்டும்; மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது’ எனப் பதிவிட்டார். இதனால், இந்த விவகாரம் மீண்டும் திரையுலகில் மட்டுமல்ல, சமூக ஊடகங்களிலும் கொழுந்துவிட்டு எரிகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி, “உண்மையில் வைரமுத்துவை வளர்த்தது இளையராஜாதான். வைரமுத்து மீதான கோபத்தில் யாரையும் கவித்துவமாக எழுதவிடாமல் 20 வருடம், தான் போட்ட நல்ல ட்யூன்களுக்கு நிறைய Dummy lyrics ஓகே பண்ணி வைரமுத்துவை மேலும் ஜொலிக்கவிட்டவர் இளையராஜா” என கங்கை அமரனை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார். சீனு ராமசாமி, வைரமுத்துவை சீண்டியிருக்கும் இந்தக் கருத்து, தமிழ்த் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதற்குமேலே இவ்விவகாரம் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், “இளையராஜா விஷயத்தில் ஒரு கோணத்தை பார்க்கும்போது தவறாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது அவர் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அதற்குக் காரணம் இங்கிருக்கும் சட்டம். இந்தச் சட்டம் தவறாக இருக்கிறது” எனத் தெரிவித்திருப்பதும் மேலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அவர் சொன்னது இதுதான் - “இளையராஜா உரிமை கேட்கிறார். அது சரியா தவறா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும். ’என் பாட்டை நீங்க உபயோகப்படுத்துறீங்க.. என்கிட்ட ஒருவார்த்தை சொல்லியிருக்கலாமே’ எனக் கேட்கிறார். எந்த அளவுக்கு அதை அடிப்படையாக வைத்துக் கேட்கிறார் என்பதை அவர் தொடுத்த வழக்குகளையும் கொடுத்த அறிக்கைகளையும் வைத்துதான் முடிவு செய்ய முடியும்.
நதிக்கரையில் இருந்துகொண்டு நதியில் என்ன இருக்கிறது எனக் கணக்குப் போட முடியாது. அப்படிப் போடுவது தவறும்கூட. முதலில் இது காலம் தாழ்த்திப்போன ஒரு வழக்கு. இதை கடந்த 20 வருடங்களாகப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ‘நீயா நானா..’, ’நான் பெருசா.. நீ பெருசா’ எனப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில், அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும். எங்கே, இந்த காழ்ப்புணர்வு தொடங்கியது என்று நமக்குத் தெரியாது.
எழுத்து எப்படி ஒரு கவிஞனுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு இசையும் ஓர் இசை அமைப்பாளருக்கு முக்கியம்.சினேகன்
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. ’பாட்டுக்கு இசையா.. இசைக்கு பாட்டா’ எனச் சொல்லும்போது நான் படத்திற்கு பாட்டு எனப் போகிறவன்.
நீங்கள் ஏன், என்னை ஒருபக்கம் சாய்க்க முயற்சிக்கிறீர்கள்.. என்னை ஒருபக்கத்திற்கு ஆளாகப் பார்க்க முயற்சிப்பதே முதல் குற்றம். அதை எப்போதும் செய்யாதீர்கள். முதலில், ‘இவர் இவருக்குப் பேசுவார்’ என்ற மனப்பான்மையில் கேள்வி கேட்பதை நிறுத்துங்கள். அதுதான் நல்லது.
இளையராஜா பாட்டை வியாபார நோக்கத்திற்குப் பயன்படுத்தும்போது, ‘என்கிட்ட குறைந்தபட்சம் அனுமதியாவது கேட்கலாமே’ என இளையராஜா கேட்பதில் எனக்கு தவறாகத் தோன்றவில்லை.கவிஞர் சினேகன்
இளையராஜா பாடலை நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர் கேட்கிறார். இளையராஜாவிடம் அனுமதி பெற்று பல இடங்களில் பாடல்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு அவர் வழக்கு போடவில்லை.. பணம் பெற்றாரா என்றெல்லாம் தெரியாது. ஆனால், ’குறைந்தபட்சம் என்னிடம் அனுமதி கேளுங்கள்’ என்கிறார் அவ்வளவுதான். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதற்கு தனி மனிதனாகக் கருத்துச் சொல்வதே தவறு” எனச் சாட்டையடி பதில் கொடுத்திருந்தார்.
ஆனாலும், இந்த விவகாரம் என்பது நீறுபூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கிறது. “ஒரு திரைப்படத்தில் எந்தச் சூழ்நிலைக்கு பாடல் தேவை என்பது குறித்து இசையமைப்பாளரிடம் கூறப்படுகிறது. அதற்கு ஏற்பவே இசையமைப்பாளர் இசையமைக்கிறார். அந்த இசைக்கு ஏற்ப ஒருவர் பாடல் வரிகளை எழுதுகிறார். அவருக்கும் தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்கிறார். இசையமைப்பாளர் கேட்கும் இசைக் கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர்தான் பணம் கொடுக்கிறார். எனவே ஒரு தயாரிப்பாளர், தான் பணத்தைச் செலவு செய்து ஒரு பாடலைச் சொந்தமாக்குகிறார். அப்பயிருக்கையில், இசை அமைக்க தயாரிப்பாளர்கள் பணம் கொடுக்கும்போது இளையராஜா காப்புரிமை கேட்பது நியாயமில்லை” என்பதுதான் எல்லோரும் வைக்கும் கேள்வி.
இளையராஜாவின் செயல்பாட்டை மேலோட்டமாகப் பார்த்தோமேயானால், தவறு உள்ளதுபோல இருக்கும். ஆனால் அதில் உள்ளதை ஆராய்ந்தால் மட்டுமே உண்மை விளங்கும். இளையராஜாவின் பாடல்களை டிஜிட்டல் மயமாக்கும் சில முன்னணி நிறுவனங்கள் அதில் கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.
அதாவது, “தற்போது தயாரிப்பாளர்களிடம் இருந்து, பாடல் காணொலிகளுக்கு உரிமம் வாங்குகிறார்கள். ஆனால் பாடல்களைத் தனியாக எடுத்துப் போடுகிறார்கள். பாடல்களைத் தனியாக எடுத்துப் பயன்படுத்தினாலே இசையமைப்பாளரின் இசைவு முக்கியம். இசையமைப்பாளரிடம் நீங்கள் ஒப்பந்தம் போடவேண்டும்; அவருக்கு ராயல்டி கொடுக்க வேண்டும்.
ஒட்டுமொத்த படத்தையும் நீங்கள் தயாரிப்பாளரிடம் வாங்கியுள்ளீர்கள் என்றால், ஒட்டுமொத்த படத்தையும் ஒளிபரப்ப வேண்டும். ஆனால், பாடலைத் தனியாக எடுத்துப் போடவேண்டும் என்றால், அதற்கான உரிமம் இசையமைப்பாளரிடம்தான் இருக்கிறது. தயாரிப்பாளரிடம்தானே மொத்த உரிமமும் இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. ஆனால் புதிய சட்ட மாறுதல்கள் இசையமைப்பாளருக்கான உரிமையை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் காப்புரிமைச் சட்டம் 2012ஆம் ஆண்டு பல புதிய பரிமாணங்களோடு வந்தது. ஒரு படம் இயக்கப்படுகிறது என்றால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அனைத்து உரிமைகளையும் வைத்திருப்பார் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அந்தப் பாடல்கள் குறித்த அந்தக் காப்புரிமை யாரிடம் இருக்கிறதென்றால், இசையமைப்பாளரிடம்தான் இருக்கிறது. இதைத்தான் நம் சட்டம் சொல்கிறது. அந்த உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இளையராஜா தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்” என்பதுதான் இளையராஜா தரப்பு வைக்கும் வாதம்.
உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமெனில், குழந்தை வளர்ப்பு குறித்துப் பேசும் நிறுவனம் ஒன்று, அதன் காப்புரிமையை தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு விற்றுவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நிறுவனம், தேவைப்படும்போது, குழந்தை வளர்ப்பு குறித்து முழு வீடியோவையும் வெளியிடுகிறது. அதேநேரத்தில், அவ்வப்போது அதிலிருக்கும் ஒவ்வொரு பிரிவு குறித்த வளர்ப்பு முறைகளையும் வெளியிடுகிறது. அதாவது, ஒவ்வொரு சில மணி நேரத்திற்கும் கால், கை, மூளை, கண்கள் என தனித்தனி வளர்ச்சி குறித்து ஒளிபரப்பி வருமானம் பார்க்கிறது.
அந்த வகையில், ஒரு முழுப் படத்தை ஒளிபரப்பினால் தவறில்லை. பாடல், இசை, சூப்பர் சீன் என ஒவ்வொரு பிரிவாகப் பிரித்து ஒளிபரப்பப்படுகிறது. அந்த வகையில்தான் இந்தப் பாடலின் உரிமையும் கோரப்படுகிறது. ஆக, இதிலிருந்து இளையராஜாவுக்கு எந்த ராயல்டியும் செல்வது இல்லை என்பதுதான் அவர் தரப்பு வாதம். மேலும் தொண்டு நிறுவனங்களில் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கு எல்லாம் அவர் ராயல்டி கேட்பதில்லை. அவருடைய இசையை வைத்து இரண்டு மடங்கு லாபம் பார்க்கும் நிறுவனங்களுக்கு எதிராகவே இந்தச் சட்டப்போராட்டத்தை நடத்துகிறார் இளையராஜா தரப்பு வைக்கும் வாதம்.
அதேநேரத்தில், இளையராஜாவின் ராயல்டி பஞ்சாயத்துகள் குறித்து இவ்வளவு விவாதிக்கப்படும்வேளையில், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட இதர இசையமைப்பாளர்களின் ராயல்டிகள் குறித்து எந்தச் சர்ச்சையும் எழுவதில்லையே என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால், அவர்கள் (ஏ.ஆர்.ரகுமான் உட்பட பிற இசையமைப்பாளர்கள்) எல்லாம் படம் ஒன்றில் ஒப்பந்தமாகும்போதே, தான் இசையமைக்கும் படத்துக்கான ஏகபோக உரிமைகளையும் the complete Intellectual Property என்ற பெயரில் எழுதி வாங்கிக்கொண்டு விடுகின்றனர்.
எல்லோருக்கும் எல்லா மொழிகளும் தெரிவது கிடையாது. ஆனால், மொழியே தெரியாவிட்டாலும் இசையில் மயங்கிவிடுபவர்கள் உண்டு. இன்னும் சொல்லப்போனால், பறவைகளுடைய மொழி யாருக்கும் தெரிவதில்லை. ஆனால், அவற்றின் இனிமையான குரலை எல்லோரும் விரும்புவர்.
அதுபோல்தான் சிலருக்கு இசை பிடிக்காது; ஆனால் எழுத்தின்மீது தீராக் காதல் கொண்டிருப்பர். அவர்கள் முழுக்கமுழுக்கப் புத்தகப் புழுக்களாகக்கூட இருப்பர். இவர்களைத் தவிர்த்து, இன்னும் சிலரோ இசையையும் மொழியையும் காதலிப்பர்.
ஆம், ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் எந்த அளவுக்கு முக்கியமோ, ஒரு மனிதனுக்கு இரண்டு கண்கள் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு ஒரு நாட்டுக்கும் மனிதனுக்கும் இசையும் மொழியும் முக்கியம் என்பதே பலருடைய வாதமாக இருக்கிறது. எனினும், இளையராஜா பாடல் காப்புரிமை விஷயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பே மறு அத்தியாயத்தை எழுதும்.
அதுவரை தனிநபர்கள் இவ்விஷயத்தில் கருத்து தெரிவிக்காமல் இருப்பதே நல்லது!
இப்படி, இளையராஜாவைப் பற்றி இங்கு ஏகப்பட்ட விவாதங்கள் பறந்துகொண்டிருக்கும் நிலையில், அவரோ, மொரிஷியஸில் தனது மகன் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறார். அதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.