சினிமா

நிலவேம்பு கசாயத்திற்கு நான் எதிரானவன் இல்லை: கமல்ஹாசன் விளக்கம்

webteam

நிலவேம்பு கசாயத்திற்கு நான் எதிரானவன் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம்  அளிவித்துள்ளார். 

கமல்ஹாசன் நிலவேம்பு கசாயத்தை மக்களுக்கு வழங்க வேண்டாம் என்று அவரது நற்பணி இயக்கத்தினருக்கு அறிவுரை வழங்கியிருந்தார். அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதனைக் கண்டு சித்த மருத்துவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளப்பியது. அதனையொட்டி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அதில், ”நிலவேம்புக் கசாயத்தை நம் நற்பணி இயக்கத்தார் விநியோகிக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டதை சிலர், நிலவேம்புக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு என்று செய்தியாய்ப் பரப்புவது எந்த விதத்திலும் நியாயமில்லை. ஆர்வக்கோளாறில் சரச்சைக்குள்ளாகி இருக்கும் மருந்தை, அளவில்லாமல் கொடுப்பதைத் தவிர்க்கவே அந்த ட்வீட்டை வெளியிட்டேன். வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் மருந்துகளை என் இயக்கத்தார் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை. வைத்தியர்கள் உதவியோ அறிவுரையோ இல்லாமல் மருந்துகள் அளவின்றி அனைவருக்கும்  விநியோகிக்கப்படுவதை  மட்டுமே நான் விமர்சிக்கிறேன். மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். ஆனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் ஆர்வம் மட்டுமே  ஊக்கியாகச் செயல்படுதலை என் இயக்கத்தார் செய்வதைத்தான் நான் நிறுத்தி வைக்கச் சொல்லியிருக்கிறேன். சித்தா, அலோபதி  என்ற தனி சார்பு எனக்கில்லை. 

அதுவரை டெங்குவை எப்படிக் கட்டுப்படுத்துவது? என்றால் பக்கத்து மாநிலமான கேரளத்தைப்பார்த்து கற்றுக்கொள்ளலாம். இத்தனை நாள் ஈ ஓட்டாமல் கொசுவை விரட்டியிருக்கலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.