சினிமா

`புல்லட்’ பாடலை தொடர்ந்து `தி வாரியர்’ படத்தின் அடுத்த பாடல் வெளியீடு!

`புல்லட்’ பாடலை தொடர்ந்து `தி வாரியர்’ படத்தின் அடுத்த பாடல் வெளியீடு!

நிவேதா ஜெகராஜா

லிங்குசாமி இயக்கியுள்ள தி வாரியர் படத்தில் கலக்கலான கலர்ஸ் பாடல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள தி வாரியர் திரைப்படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. தி வாரியர் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினெனி நடிக்க, நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஆதி வில்லனாக நடித்துள்ள இப்படத்தில் அக்ஷரா கௌடா, நதியா, பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தி வாரியர் திரைப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியான புல்லட் பாடல் மற்றும் விசில் பாடல் ஹிட்டடிக்க, தற்போது கலர்ஸ் பாடல் வெளியாகியுள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி, க்ரித்தி ஷெட்டி, ஆதி நடித்துள்ள படம் 'தி வாரியர்'. தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் படக்குழுவினரான இயக்குநர் லிங்குசாமி, நடிகர்கள் ராம் பொத்தினேனி, ஆதி, நடிகை க்ரித்தி ஷெட்டி, நதியா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், வசனகர்த்தா பிருந்தா சாரதி, பாடலாசிரியர் விவேகா உடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் மணிரத்னம், பாரதிராஜா, ஷங்கர், வசந்தபாலன், கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஜே.சூர்யா, பார்த்திபன், சிறுத்தை சிவா, விஜய் மில்டன், பாலாஜி சக்திவேல், பி.எஸ்.மித்ரன், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, திரைப்பட விநியோகஸ்தர்கள் அன்புச்செழியன் மற்றும் நடிகர்கள் விஷால், ஆர்யா எனப் தமிழ்சினிமாவின் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவரும் படம் வெற்றியடைய வாழ்த்தியது போல, இயக்குநர் லிங்குசாமியுடனான நட்பைப் பற்றியும் பேசினார்கள். இறுதியாக நன்றியுரை பேசிய லிங்குசாமி தன்னுடைய அழைப்பை ஏற்று வந்த திரைப் பிரபலங்களுக்கு நெகிழ்ச்சியுடன் கண்கலங்கி நன்றி கூறினார்.

நிகழ்வில் நடிகை நதியா பேசுகையில், "எல்லாரும் லிங்குசாமி பத்தி சொன்னத கேக்க சந்தோஷமா இருந்தது. இப்படி ஒரு இயக்குநர் கூட ஒர்க் பண்ணது சந்தோஷம்" என்றார். நடிகர் ஆதி "இந்தப் படம் நடிக்கலன்னா இவ்வளோ ஜாம்பவான்கள் கூட ஒரே ஸ்டேஜ்ல உக்காந்திருக்க முடியாது. அதுக்காவே ஸ்பெஷல் நன்றி லிங்குசாமி சார்” என்றார். நடிகை க்ரித்தி ஷெட்டி "ஏஞ்சல்ஸ் எப்போவும் நம்முடன் இருப்பார்கள் என கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இன்றைக்குதான் அவர்களை ஸ்டேஜில் பார்க்கிறேன். டி.எஸ்.பி இசை, லிங்கு சார் இயக்கம், ராமுடன் நடித்தது எல்லாமும் மகிழ்ச்சி" என்றார். இசையமைப்பாளர் டி.எஸ்.பி "முன்னாலேயே லிங்குசாமி சாருடன் பணியாற்ற வேண்டியது. இப்போது வாரியரில் அது அமைந்தது மகிழ்ச்சி. நாங்கள் பணியாற்றிய காலத்தில் எந்த ஒரு நபரை பற்றியும் குறை கூறியதே இல்லை. அவ்வளவு நல்ல மனிதர். மற்றவர் வெற்றியை நாம் ரசிக்க முடியவில்லை என்றால் நாம் ஒரு நல்ல டெக்னீஷியனாக இருக்க முடியாது என என் அப்பா சொல்வார். அது மாதிரி மற்ற கலைஞர்களை பாராட்டக் கூடியர் லிங்கு" என்றார்.

நடிகர் ராம் பொத்தினேனி "15 வருஷமா தமிழ் இன்டஸ்ட்ரிக்கு வரக் காத்துக் கொண்டிருந்தேன். அது இந்த மாதிரி ஒரு மேடையில் நடந்தது பெருமையாக இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் கெஸ்ட்களை காட்டும் போது ப்ரஸ் மீட்டா, அவார்ட் ஃபங்கஷனா எனக் கேட்டார்கள். உண்மையில் இது ஒரு அவார்ட் ஃபங்ஷன் தான். இங்கு வந்த ஒவ்வொருவரும் லிங்குசாமி ஜெயித்த அவார்ட்” என்றார். இயக்குநர் லிங்குசாமி "ரெண்டு கண் இருப்பதால், ரெண்டு கண் மட்டும் கலங்குகிறது. உடம்பு முழுக்க கண் இருந்தால் அப்படி அழுவேன். மணி சாருக்கு போன் செய்து அழைத்ததும் எங்கே? எப்போ? அவ்வளவுதான் கேட்டார். அவரின் பொன்னியின் செல்வன் ஃபங்கஷன் விரைவில் நடக்க இருக்கிறது, ஆனால் இங்கு வந்திருக்கிறார். ஷங்கர் சார் அவருடைய ஷூட்டிங்கை விட்டுவிட்டு எனக்காக வந்தார். காசு போலாம், கார் வீடு போலாம் ஆனா, இந்த மாதிரி நண்பர்கள் எப்பவும் இருப்பாங்க" என மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார்.