திருச்சி விமான நிலையத்தில் நடிகர் விக்ரமை காண வந்த ரசிகர்களுக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து தடியடி நடத்தப்பட்ட நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகவும், ‘கோப்ரா’ பட புரமோஷனுக்காகவும், இன்றுகாலை திருச்சி வந்த நடிகர் விக்ரமை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். நடிகர் விக்ரம் திருச்சி விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் பொழுது, பயணிகள் உள்ளே செல்லக்கூடிய பகுதிக்கு ரசிகர்கள் அடித்துப்பிடித்து ஓடினர். அப்பொழுது அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ரசிகர்களை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லத்தியால் அடித்து விரட்டினர். கூட்டத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை, சில ரசிகர்கள் காலால் மிதிக்கும் நிலையும் ஏற்பட்டது. பின்னர் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மதுரை, கோவை என படக்குழுவினர் ‘கோப்ரா’ பட புரமோஷனுக்காக சென்றுவிட்டனர். இந்நிலையில், திருச்சியில் நடந்த தடியடி சம்பவத்திற்கு நடிகர் விக்ரம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று கோப்ரா திரைப்பட முன்னோட்ட நிகழ்விற்கு திருச்சி வந்த என்னை, வார்த்தைகளால் விவரிக்க இயலா வண்ணம் அன்பு மழையில் நனைய வைத்த என் ரசிகர்களுக்கு என்றும் அன்புக்கு உரித்தானவனாய் என் இதயம் கனிந்த நன்றிகள். அதே வேளையில் சில விரும்பதகா சூழல் ஏற்பட்டதாக என் கவனத்திற்கு வந்துள்ளது, அத்தகைய நிகழ்விற்கும், அசௌகர்யத்திற்க்கும் என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். இங்கு இவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.