சினிமா

இங்குள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டில் இருந்து வரவில்லை - ராஜ்கிரண் கருத்து.

இங்குள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டில் இருந்து வரவில்லை - ராஜ்கிரண் கருத்து.

subramani

குடியுரிமை சட்டத் திருத்தம் பற்றி திரைப்பட நடிகர் ராஜ்கிரண் தனது  ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். அதில் தன்னுடைய தாய் தந்தை மூதாதையர்களின் குலம் பற்றி கூறியிருக்கிறார்.

 “இந்த பிரித்தாளும் சூழ்ச்சி என்பது காலம்காலமாக புளித்துப் போன விசயம்” எனக் குறிப்பிட்டிருக்கும் அவர் “ஏதோ இஸ்லாமியர்கள் அரபுநாடுகளில் இருந்து வந்தவர்கள் போலவும், பாகிஸ்தான் தான் அவர்களது நாடு என்பது போலவும் தவறான போலியான நச்சு கருத்துகளை காலம் காலமாக விதைத்து வருகின்றனர்." என பதிவு செய்திருக்கிறார்.

இந்த பொய் பிரச்சாரங்கள் ஒரு காலத்திலும் செல்லுபடியாகாது எனக் கூறியிருக்கும் ராஜ்கிரண் கூடவே தன் மூதாதையர்கள் பற்றிக் குறிப்பிடும் போது “தன் தகப்பனாரின் மூதாதையர்கள் "சேதுபதிச் சீமையின் மறவர் குலம்" என்றும் தாய் வழி மூதாதையர் "மீனவ குலம்" என்றும் கூறியிருக்கிறார்.

இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களின் இரத்த சொந்தம் எனச் சொல்லும் அவர்  இந்து மதத்திலுள்ள தீண்டாமை கொடுமைகள் தாங்காமல் சுயமரியாதையோடு வாழவே இஸ்லாமை தழுவியதாக வேதனையுடன் தெரிவிக்கிறார்.

ஒவ்வொரு மனிதனும், தனக்குப்பிடித்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக்கொள்வது, அவனவனுடைய அடிப்படை சுதந்திரம். இதை "இந்திய அரசியல் சாசன சட்டம்" உறுதி செய்திருக்கிறது என்ற தனது அழுத்தமான கருத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

ஒரே தாய்க்கு பிறந்த பிள்ளைகள் அவரவருக்கு  பிடித்தமான வாழ்க்கை முறையை தேர்ந்து எடுத்துக் கொள்வதில்லையா..? அதே போலத்தான் இதுவும் என தனது பாணியிலேயே விளக்கமும் சொல்லியிருக்கிறார் அவர். இறுதியாக பேதங்கள் அற்றதே பெரு வாழ்வு. அதில் மனித நேயமே மாண்பு. என அழகான தன் எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ராஜ்கிரண்.

 ரஜினி போன்ற நடிகர்கள் இவ்விஷயத்தில் கருத்து கூறாத நிலையில் ராஜ்கிரண் போன்ற நடிகர்கள் தங்கள் கருத்துகளையும் அரசியல் நிலைப்பாட்டையும் துணிச்சலாக பேசுவது பாராட்ட வேண்டிய விஷயம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.