சினிமா

கேரளாவில் சினிமா டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு!

கேரளாவில் சினிமா டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு!

webteam

கேரளாவில் உயர்த்தப்பட்ட புதிய சினிமா டிக்கெட் கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

கேரளாவில், சமீபத்தில் சினிமா தியேட்டர்களுக்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து கூடுதலாக கேளிக்கை வரிவிதியும் விதிக்கப்பட்டது. அதோடு வெள்ளப்பாதிப்புக்காக கூடுதலாக 1.5 சதவிகித செஸ் வரியும் விதிக்கப்பட்டது. இதற்கு கேரள சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர், தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வரிகளால் தொழில் பாதிக்கப்படும் என்றும் வரியை குறைக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை அரசு நிராகரித்துவிட்டது.

இதைக் கண்டித்து கேரளாவில் கடந்த 14-ஆம் தேதி ஸ்டிரைக் நடந்தது. தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், வரி வசூலிக்க உத்தரவிட்ட நாள் முதல் கேளிக்கை வரியை செலுத்த வேண்டிய நிலை, தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஏற்படும் என்பதால், இன்று முதல் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி இன்றுமுதல், ஒவ்வொரு வகுப்பிலும் ரூ.10 முதல் ரூ.30 வரை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து குறைந்த பட்ச கட்டணமாக ரூ.130 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தியேட்டர் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.