சினிமா

ஆகஸ்ட் 1-ல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு : திரையரங்கு உரிமையாளர்கள்

ஆகஸ்ட் 1-ல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு : திரையரங்கு உரிமையாளர்கள்

webteam

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க வாய்ப்புள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பொதுமுடக்கத்தால் சுமார் 4 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அத்துடன் சினிமா படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை. இதனால் மொத்த சினிமாத்துறையும் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கிடையே ஓடிடி தளங்களில் சில திரைப்படங்கள் வெளியானது தனிக்கதை. ஆனால் இந்த 4 மாதங்களில் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வருமான இழப்பை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்புவதால், திரையரங்குகளை உரிய விதிமுறைகளுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர். நாள்தோறும் 4 காட்சிகள் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் 2 காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டிருந்தனர்.

திரையரங்கு திறக்கப்படும் பட்சத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திறக்க வேண்டும் என அரசு சார்பில் அறிவுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க வாய்ப்புள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.