கொரோனா பொது முடக்கத்தால் திரைத்துறை தொழிலாளர்கள் வருமானத்தை முற்றிலும் இழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஒரு மாதத்திற்கு மேலாக எந்த படப்பிடிப்புகளும் நடக்கவில்லை. இதனால் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதே திரைத்துறை தொழிலாளர்களுக்கு சிரமமாகியுள்ளது. சென்னை வடபழனியில் வசிப்பவர் துணை நடிகை ராணி. இவர் 40 ஆண்டுகளாய் திரைத்துறையில் உள்ள நிலையில், இவரது ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் படப்பிடிப்பை நம்பியுள்ளது. படப்பிடிப்புக்கு சென்றால் கிடைக்கும் 550 ரூபாயை வைத்தே இவர் வாழ்ந்து வருகிறார்.
கொரோனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த பொதுமுடக்கத்தால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, அன்றாட தேவைகளுக்கே அல்லல்படும் நிலையில் தற்போது ராணி உள்ளார். அத்துடன், கடந்த 21-ம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.இவர் மட்டுமின்றி திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் சார்ந்து பணியாற்றும் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களின் நிலை இதேபோன்று தான் உள்ளது.
பிரபல நடிகர்கள் பலர் செய்த உதவி தொகையைக் கொண்டு பலர் உணவு உண்டாலும், மருத்துவம், வீட்டு வாடகை உள்ளிட்ட தேவைகள் பலருக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளன. தென்னிந்திய நடிகர் சங்கம் சிறப்பு அதிகாரி தலைமையில் இயங்கி வருவதால் பல தொழிலாளர்களுக்கு உதவ சில நடைமுறைச் சிக்கல்களும் உள்ளதாக கூறப்படுகிறது.