மும்பை கட்டடக் கலையைக் கண்டு தான் வியப்புற்றதாக பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கூறியுள்ளார்.
'இன்ஸ்செப்ஷன்', 'தி டார்க் நைட்', 'டன்கிர்க்', 'பேட்மேன் பிகின்ஸ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மிக முக்கியமான ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். இவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களத்திற்கும், அதை அவர் சொல்ல அமைக்கும் சிக்கலான திரைக்கதைக்கும் உலகெமெங்கும் ஏராளனமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
அண்மையில் இவரது இயக்கத்தில் 'டெனட்' திரைப்படம் வெளியானது. வழக்கம்போல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திரைப்படத்தில் சில காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நோலன் மும்பையில் படப்பிடிப்பு நடத்திய அனுபவம் பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது "முன்பு 'தி டார்க் நைட் ரைசஸ்' படத்திற்காக நாங்கள் மும்பை வந்திருந்தோம். உள்ளூர்வாசிகளுடனான அந்த அனுபவம் மிக நன்றாக இருந்தது. இதனைத் தொடர்ந்து எதிர்கால சினிமா குறித்து ஆலோசிக்க மீண்டும் நாங்கள் மும்பைக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த எனக்கு, மும்பையும் அதன் தோற்றமும் வியப்பை உண்டாக்கியது. அங்கு வடிவமைக்கப்பட்டிருக்கும் கட்டடங்களில் ததும்பும் வரலாறு, நகரத்தின் ஒவ்வொரு கோணத்திலும் வெளிப்படுகிறது.
ஒரு திரைக் கலைஞனாக, மும்பை எனது கற்பனைத் திறனை உத்வேகமூட்டும் வகையில் அமைந்திருந்தது. என்னையும் எனது குழுவையும், மீண்டும் மும்பைக்கு 'டெனட்'-டுக்காக வரவைத்தது. 'டெனட்' திரைப்படத்தில் இடம்பெற்ற மும்பை சம்பந்தமான காட்சிகளில், ஏரியல் ஷாட்களும், லேண்ட் ஸ்கேப் ஷாட்களும் படத்தில் மிக அருமையான காட்சிகளாக இடம்பெற்றிருந்தன" என்று கூறியுள்ளார்.