கடந்த டிசம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியான கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனட்’ திரைப்படம் இந்தியாவில் அமேசான் பிரைமில் நாளை வெளியாகிறது.
உலகின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ’டெனட்’ திரைப்படம் இந்தியா முழுக்க இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. வித்தியாசமான கதைக்களத்துடன் சயின்ஸ்ஃபிக்ஷன் திரைப்படங்கள் எடுக்கும் கிறிஸ்டோபர் நோலன் படங்கள் எப்போது வரும் என்று அவரது ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பார்கள்.
’மெமன்டோ’, ’பேட்மேன் பிகின்ஸ்’, ’தி டார்க் நைட்’, ’தி டார்க் நைட் ரைசஸ்’, ’இன்செப்ஷன்’, ’இன்டர்ஸ்டெல்லர்’ என கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படங்கள் அத்தனையும் உலகம் முழுக்க வசூல் சாதனை செய்தவை. அப்படியொரு புகழ்மிக்க இயக்குநரான கிறிஸ்டோபர் ’டெனட்’ படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமாரின் மாமியார் நடிகை டிம்பிள் கபாடியா ’பிரியா’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில காட்சிகள் மும்பையில் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், தியேட்டரில் வெளியான டெனட் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியது. மார்ச் 31 நாளை முதல் அமேசான் பிரைமில் தமிழ்,தெலுங்கு, இந்தி டப்பிங்கில் டெனட் படத்தைக் காணலாம். அதேசமயம், அமெரிக்காவில் அமேசான் பிரைமில் இப்படம் வெளியாகாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.