சினிமா

குக்கூ சிட்டியின் 'அட்ராசிட்டி' ! - 2.0 டீஸர் விமர்சனம்

குக்கூ சிட்டியின் 'அட்ராசிட்டி' ! - 2.0 டீஸர் விமர்சனம்

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் காத்திருந்தனர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் 2.0 திரைப்படத்தின் டீஸரை காண்பதற்கு. அவர்கள் காத்திருப்புக்கு விடையாக கடந்த சில நாள்களுக்கு முன்பாக இயக்குநர் ஷங்கர் 2.0 திரைப்படத்தின் டீஸர் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் 2.0 படத்தின் டீஸர், சரியாக இன்று காலை 9 மணிக்கு யுடியூபிலும் மற்றும் திரையரங்களிலும் வெளியானது.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த டீஸரை யுடியூபில் மட்டும் 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் இதுவரை கண்டுள்ளனர். முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது திரைப்படத்தில் எமி ஜாக்சனும் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சரி எப்படி இருக்கிறது 2.0 டீஸர் ? இந்தியாவில் விஎஃப்எக்ஸ் பணிகளுக்கு மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறியிருப்பதை நிறைவேற்றி இருக்கிறார்களா என்பதை பார்ப்போம்.

செல்போன்கள் பறவையா ?

டீஸரின் தொடக்கத்திலேயே செல்போன் டவரை பறவைகள் சுற்றிவந்து ஆக்கிரமிக்கும். பின்பு, பொது மக்களின் ஒவ்வொரு செல்போனாக பறந்து செல்கிறது. என்ன நடக்கிறது என்று காவல்துறை புரியாமல் தவிக்கின்றனர். அப்போது அரசு அவசரமாக கூட்டப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் விஞ்ஞானி ரஜினி (எந்திரன் படத்தில் வந்த வசீகரன் கதாப்பாத்திரமாக இருக்கலாம்), மக்களை காக்க வேண்டும் என்றால் சிட்டி தி ரொபோட்டை நாம் மீண்டும் கொண்டு வரவேண்டும் என்கிறார்.

எந்திரன் முதல் பாகத்தின் இறுதியில் சிட்டி டிஸ்மாண்டல் செய்யப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும். இந்த டீஸரை பார்க்கும்போது பேராபத்தில் இருக்கும் மக்களை காப்பாற்ற மீண்டும் சிட்டிக்கு உயிர் கொடுப்பது போன்ற காட்சி வருகிறது.

என்ன பறவை ? 

அக்ஷய் குமார்தான் வில்லன் என்றும் அவர்தான் ஒரு 'சூப்பர் பேர்ட்' கதாப்பாத்திரத்தை உருவாக்கி மக்களை அச்சுறுத்துகிறார் என்று டீஸரில் தெளிவாக காட்டப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த சூப்பர் பேர்ட் கழுகா இல்லை ராஜாளி பறவையா என்று படம் வெளியானதும் தெரிய வரும். மேலும், இந்தப் பெரும் ஆபத்தில் இருந்து சிட்டி ரொபோ உதவியுடன் மக்களை பல்வேறு அவதாரங்களை எடுக்கிறது. எந்திரன் படத்தில் 100 துப்பாக்கியை வைத்துக்கொண்டு சுடுகின்ற காட்சி இந்தப் படத்திலும் இருக்கிறது. அதனால் சிட்டியின் அட்ராசிட்டிகளை இதிலும் காணலாம்.

என்ன சொல்ல வருகிறார் ஷங்கர் ?

The World is Not only for Humans என்ற வாசகம் 2.0 திரைப்படத்தின் டேக் லைனாக இருக்கிறது. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. ஷங்கர் இதில் செல்போன் மற்றும் அதன் டவர்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசி இருக்கிறாரா ? அல்லது செல்போன் டவர்களால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பேசியிருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் நிச்சயமாக செல்போன் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிச்சயம் பேசியிருக்கிறார் என்பதனை மட்டும் புரிந்துக்கொள்ளலாம். 

கிராபிக்ஸ் எப்படி ?

உலகின் ஏழு முக்கிய விஎஃப்எக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இரவுப் பகலாக உழைத்திருப்பது கண் கூடாக தெரிகிறது. ஹாலிவுட்டில் நாம் பார்த்த 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்' படத்தை நினைவூட்டி இருக்கிறது. பாகுபலி படங்களின் இரண்டு பாகங்களை பார்த்த பின்பு இந்திய ரசிகர்கள் தரமான VFX தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை நிச்சயம் 2.0 நிறைவேற்றும் என்றே டீஸரை பார்க்கும்போது தெரிகிறது. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை அதிரடிக்கிறது. இறுதியில் சிட்டி "குக்கூ" என கூறுவதும், பின்னணியில் ரஜினியின் கலங்கடிக்கும் சிரிப்போடு நிறைவடையும் டீஸர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.