சினிமா

‘தர்பார்’ படத்திற்கு தடை கோரிய வழக்கு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

‘தர்பார்’ படத்திற்கு தடை கோரிய வழக்கு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

webteam

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு தடை விதிக்க கோரி, மலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 பட தயாரிப்பு பணிக்காக லைக்கா நிறுவனத்திற்கு, 12 கோடி ரூபாயை கடனாக வழங்கியதாகவும், அந்தத் தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயை வழங்க வேண்டி இருப்பதால், அந்தத் தொகையை வழங்காமல் ‘தர்பார்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைக்கா நிறுவனம் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யபட்டது. அதில், எந்தக் கடனும் லைக்கா நிறுவனம் வழங்க வேண்டியது இல்லை எனவும், மனுதரார் தான் தங்கள் நிறுவனத்திற்கு 1 கோடியே 45 லட்சம் அளிக்க வேண்டும் என்பதால்‘தர்பார்’ படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கபட்டது.

வழக்கு விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு தரவேண்டிய தொகைக்கு பதிலாக ‘காலா’ படத்தின் சிங்கப்பூர் உரிமையை அளித்துள்ளதாக பதில் மனுவில் தெரிவித்துள்ளனர். ஆனால் அதுபோன்ற எந்த ஒப்பந்தம் செய்யவில்லை என தெரிவித்தார். லைக்கா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் நிறுவனம் பெற்ற கடனுக்கு ‘காலா’ படத்தின் சிங்கப்பூர் வெளியிட்டு உரிமை அளித்ததாகவும், அதற்கான ஒப்பந்தம் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.