இந்தியாவில் 1975ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போதைய பிரதமரான இந்திரா காந்தியின் வழிகாட்டுதலின் படி, குடியரசுத்தலைவராக இருந்த பக்ருதின் அலி அகமதுவால் அரசியலமைப்புச் சட்ட விதி352-ன் படி நெருக்கடி நிலை நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டது. எமர்ஜென்சி கொண்டுவரப்பட்ட சில நாட்களில், இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியால் மும்பையில் நடத்தப்பட்ட காங்கிரஸ் பேரணியில், அந்நாளின் மிகப் பிரபலமான பாடகர் கிஷோர் குமாரைப் பாடச்சொல்லி கேட்டார்கள் பேரணி ஒருங்கிணைப்பாளர்கள். கிஷோர் குமார் பாட மறுத்துவிட்டார். அதன்பின், அப்போதைய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்த விசி ஷுக்லா, அகில இந்திய வானொலியிலும், தூர்தர்ஷன் ஒளிபரப்பிலும், கிஷோர் குமாரின் பாடல்களை ஒளிபரப்பக்கூடாது என்னும் அதிகாரப்பூர்வமற்ற, ஆனால் வாய் வழி உத்தரவாக தடை பிறப்பித்திருந்தார்.
நெருக்கடி நிலையானது 1975 ஜூன் 25ம் தேதி முதல் 1977 மார்ச் 23 வரை சுமார் 21 மாதங்கள் நீடித்தது. இந்தக் கால கட்டத்தில் அரச ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. போர் நிகழும் சூழலில் அல்லது போர் நிகழும் போது மட்டும் அமல்படுத்தப்பட வேண்டிய நெருக்கடி நிலை, இந்திரா காந்தியின் நலனைக் காக்கவும், ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் கொண்டுவரப்பட்டது. அந்த இக்கட்டான நேரத்தில், மக்கள் விரும்பி ரசித்த கிஷோர்குமாரின் பாடல்கள், எமர்ஜென்சி முடிவுக்கு வரும் வரை (23 மார்ச் 1977) ஒளிபரப்பப்படவில்லை.