இந்தி நடிகர் ராகுல் போஸிடம் 2 வாழைப் பழத்துக்கு ரூ. 442.50 வசூலித்த நட்சத்திர ஓட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பிரபல இந்தி நடிகர் ராகுல் போஸ். இவர், தமிழில், கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்தி பட ஷூட்டிங்கிற்காக சண்டிகர் சென்றிருந்த அவர், ஐந்து நட்சத்திர ஓட்டலான மாரியாட்டில் தங்கினார். அங்கிருந்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், அதில், இரண்டு வாழைப்பழம் கேட்டேன். பழத்துடன் வந்திருக்கும் பில்லை பாருங்கள். இந்த இரண்டு பழங்களின் விலை, ஜி.எஸ்.டி.யோடு சேர்த்து ரூ. 442.50. இதற்கு தகுதியானவன் தானா என்பது தெரியவில்லை’’ என்று கிண்டலாகத் தெரிவித்தி ருந்தார்.
இவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. இந்நிலையில் கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையர் இதுபற்றிய சாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பழங்களுக்கு வரி விதிப்பதில்லை என்றும் அந்த ஓட்டல் நிர்வாகம் எப்படி அதற்கு வரி விதித்தது என்றும் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஓட்டல் நிர்வாகம் சரியான பதிலை அளிக்கவில்லை என்றால், அந்த ஓட்டலுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த சர்ச்சையை பயன்படுத்திக் கொண்ட மும்பை தாஜ் ஓட்டல், தங்கள் ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு பழங்கள் இலவசமாகத் தரப்படும் என்று தெரிவித்துள்ளது.