சினிமா

'காலா'வில் இல்லாதது என்ன ? ரஞ்சித் சொல்லாதது என்ன ?

'காலா'வில் இல்லாதது என்ன ? ரஞ்சித் சொல்லாதது என்ன ?

பல்வேறு களேபரங்கள் இடையே ரஜினிகாந்த் நடித்த காலா ஒருவழியாக நேற்று வெளியிடப்பட்டது. காலா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயரையும் கொடுத்துள்ளது. இவையெலலாம் படக்க குழுவினருக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய விஷயமாக இருக்கக் கூடும். ஆனால், பா.ரஞ்சித் என்ற இயக்குநர் இந்தக் "காலா"வை படமாக்கியதில், திரைக்கதையில் போதுமான "டீடெய்லிங்" செய்யவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. இதை ரஞ்சித் ஒப்புக்கொண்டாலும், இல்லையென்றாலும் அதுதான் உண்மை.

நமது புதிய தலைமுறை இணையதளத்தின் காலா விமர்சனத்தில் கூட "குறைகள் இல்லாமல் இல்லை, ஆனால் படம் முக்கியமான அரசியல் பேசுவதால் குறைகளை புறம் தள்ளிவிடலாம்" என கூறப்பட்டு இருந்தது. காலா திரைக்கதையில் இருக்கும் ஒரே மைனஸ் கதாப்பாத்திரங்களின் டீடெயில். இது பிரதான கதாப்பாத்திரமான கரிகாலனுக்கு மிஸ் ஆகியிருக்கிறது. அதேபோல நானா பட்டேகரின் கதாப்பாத்திரமும் ஆழமான விவரங்கள் இல்லாமல், படம் பார்ப்பவரின் யூகங்களுக்கே விட்டுவிடப்படுகிறது.

இதே மும்பை இதே தாராவி, 25 ஆண்டுகளுக்கு முன்பாக வந்த மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த "நாயகன்" இன்று வரை ஒரு கிளாஸ் மூவி வரிசையில் இருக்கிறது. அதற்கு காரணம் வேலு நாயக்கர் கதாப்பாத்திரத்தின் ஆழம். அதனை இயக்குநர் கொண்டு வந்தவிதம். வேலு நாயக்கர் தாராவி மக்களுக்காக அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல விஷயங்களை செய்வார். ஆனால், காலாவின் கதைப்படி 40 ஆண்டுகளாக தாராவியில் இருக்கும் ரஜினி அவர்களுக்காக என்ன செய்தார் ? என்பது ஒரு காட்சியில் கூட இல்லை. குடும்பத்துடன் மூன்று ஆண் பிள்ளைகளுடன் இருக்கிறார் ரஜினி, ஆனால் அவர் செய்யும் தொழில் என்ன ? வசதியாவும் இருக்கிறார் அது எப்படி ? அதேபோல தாராவி மக்கள் ரஜினியின் பின்னால் கூடுகிறார்கள். அவர் சொல்வதை செய்கிறார்கள், போராடுகிறார்கள். ரஜினியின் ஆட்டுவிப்பில் இருக்கும் இத்தனை பேரை ரஜினி எப்படி வசீகரித்தார் ? அதற்கான டீட்டெயிலிங்கும் இல்லை ! ஏன் ரஞ்சித் ? அதனாலேயே சில இடங்களில் பார்வையாளர்களுக்கு ஓர் அந்நியத்தன்மை வெளிப்படுவதை தவிர்க்க முடியவில்லை.

இதற்கடுத்து படத்தின் நெகட்டிவ் கதாப்பாத்திரமான நானா பட்டேகர். இந்தியத் திரையுலகில் நானா ஒரு தவிர்க்கமுடியாத நடிகன். நடிப்பு ராட்சன் என்றுக் கூட சொல்லலாம். நானாவும், தன் பங்கை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால், நானா யார் ? மாநில அமைச்சரா ? மத்திய அமைச்சரா ? மாநிலக் கட்சியின் தலைவரா ? தேசியக் கட்சியின் மாநிலப் பிரிவு தலைவரா ? கார்ப்பரேட் கம்பெனி சி.இ.ஓ.வா ? இல்லை லோக்கல் தாதாவா ? இதனையும் ரஞ்சித் தெளிவுப்படுத்தவில்லை. படம் பார்க்கும்போது நானா யார் என யோசித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

நாயகன் படத்தில் வேலு நாயக்கருக்கு நண்பனாக பக்கபலமாக இருக்கும் கதாப்பாத்திரம் செல்வம் (ஜனகராஜ்). அதேபோல காலாவில் படம்நெடுக ரஜினியுடன் பயணிக்கும் கதாப்பாத்திரம் சமுத்திரக்கனியுடையது. ஆனால், சமுத்திரக்கனி மாமா மச்சான் என்று ரஜினியிடம் பேசினாலும். சமுத்திரகனி யார் ?  ரஜினியின் நண்பரா ? உறவினரா ? எப்போதிருந்து காலாவுடன் இருக்கிறார் ? படத்தில் சமுத்திரக்கனி போதையில் இருப்பது போல, பார்வையாளனும் அப்படித்தான் இருக்கிறான். நல்லவேளை கனியின் கலகல ஒன்லைனர்கள் நகைச்சுவைகள் அவரின் கதாப்பாத்திரத்தை காப்பாற்றுகிறது.

அதேபோல சரீனா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஹூமா குரேஷி தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் சமூக ஆர்வலர். ஆனால், தாராவியில் குடியிருப்புக் கட்ட பிளான் போடும்போது, கட்டுமானக்காரர்கள் கோல்ஃப் கிரவுண்டுக்கு நிலம் ஒதுக்கும்போது ஆமாம் சாமி போடுகிறார்.  நானா படேகர் என்கிற அரசியல்வாதி இருக்கிறார் என்று தெரிந்தும் அவரை நேரில் சந்தித்து மன்னிப்பும், அனுமதியும் கோருகிறார் என்ன மாதிரியான பாத்திரப்படைப்பு இது ? முன்னாள் காதலர் காலாவுக்கே வெளிச்சம். 

அதேபோல குடிசைப் பகுதிகளுக்கு வெளியே இருப்பவர் அனைவரும் சுயநலம் மிக்கவர்கள் போல சித்தரிக்கப்பட்ட காட்சிகளும் அதிகம். இதுபோன்ற திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளும், கதாப்பாத்திரங்களுக்கான டீடெயிலிங்கும் நிறைய மிஸ்ஸிங். ஆனால், ரஜினி என்ற பிரம்மாண்ட பிம்பம் மூலமாக இந்த ஓட்டைகளை ரஞ்சித் அடைத்துள்ளார் என்பதே உண்மை.