சினிமா

அமர்த்தியா சென் படத்திற்கு 'பசு'வால் சிக்கல்

அமர்த்தியா சென் படத்திற்கு 'பசு'வால் சிக்கல்

webteam

அமர்தியா சென் பற்றிய ஆவணப்படத்தில் பசு, குஜராத், இந்துத்துவா உள்ளிட்ட வசனங்களை நீக்க வேண்டும் என தணிக்கை ஆணையம் கூறியுள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரும், தத்துவ அறிஞருமான அமர்த்தியா சென் குறித்த ”தி ஆர்கியுமண்டேடிவ் இந்தியன்” என்ற ஆவணப்படத்தை சுமன் கோஷ் என்பவர் இயக்கியுள்ளார். அந்தப் படம் அமர்த்தியா சென், அவருடைய மாணவர் மற்றும் பொருளாதார பேராசிரியர் கெளசிக் பாசு ஆகியோரின் கலந்துரையாடலை மையமாக கொண்டது. அவர்களின் கலந்துறையாடலில், ”குஜராத், பசு, இந்துத்துவ பார்வையில் இந்தியா” போன்ற வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன, இதுபோன்ற வார்த்தைகளை நீக்கினால் தான் படத்தில் யு/எ சான்று கொடுக்க முடியும் என்று மத்திய திரைப்பட தணிக்கை ஆணையம் கூறியது. இதனால் கடந்த ஜூலை 10-ம் தேதி வெளியாக வேண்டிய படம் தாமதமாகியுள்ளது.

இது குறித்து ஆவணப்படத்தின் இயக்குனர் கோஷ், தணிக்கை ஆணையம் கூறுவது போல் அந்த வசனங்களை நீக்க முடியாது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது என்றார்.

இப்படத்தில் அமர்தியா சென், முக்கியமான வரலாற்று ஆய்வாளரான ஹாவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுகதா போஸ் மற்றும் கோர்னல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கெளசிக் பாசு ஆகியோரிடம் நேர்காணல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது சிறு வயது முதல் தற்போது வரையிலான அனுபவத்தை இந்த ஆவணப்படத்தின் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தணிக்கை ஆணையம் கூறியபடி, படத்தில் வரும் அந்த வசனங்களை நீக்கமுடியாது என்று இயக்குனர் சுமன் கோஷ் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.