16 ஆண்டுகளில் 793 படங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு தெரிவித்துள்ளது.
எந்த திரைப்படமாக இருந்தாலும் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் பார்வைக்கு சென்ற பிறகு தான் திரையரங்குகளில் திரைக்கு வரும். இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவானது மத்திய அரசின் செய்தி ஒளிபரப்பு அமைச்சரவையின் கீழ் செயல்படும். நாடாளுமன்ற சட்டத்தின்படி அமைக்கப்பட்ட தணிக்கைக்குழு நீதிமன்றத்துக்கு இணையான தகுதியைப் பெற்றது. சரியான காரணங்களை சுட்டிக்காட்டி திரைப்படத்தின் காட்சிகளை, வசனங்களை ஏன் திரைப்படத்தையே தடை செய்ய தணிக்கைக்குழுவுக்கு முழு அதிகாரம் உண்டு.
இந்நிலையில் லக்னோவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதில் தணிக்கைக்குழு தடை செய்த படங்களின் விவரம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள தணிக்கைக்குழு, ஜனவரி 1 2000 ஆம் ஆண்டு முதல் மார்ச் 31, 2016 வரையிலான கடந்த 16 ஆண்டுகளில் 793 படங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 586 இந்திய படங்களும், 207 வெளிநாட்டு படங்களும் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் ''2012 -13ம் ஆண்டுகளில் 82 படங்களும், 2013 -14ம் ஆண்டுகளில் 119 படங்களும், 2014 -15ம் ஆண்டுகளில் 152 படங்களும், 2015 -16ம் ஆண்டுகளில்153 படங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 2007ம் ஆண்டில் 11 படங்களும், 2008 இல் 10 படங்களும், 2010ல் 9 படங்களும் தடை செய்யப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்துள்ளது.
மொழிவாரியாக பார்த்தால் ஹிந்தியில் 231 படங்களும், தமிழில் 96 படங்களும், தெலுங்கில் 53 படங்களும், கன்னட மொழியில் 39 படங்களும், மலையாளத்தில் 23 படங்களும், பஞ்சாபியில் 17 படங்களும், பெங்காளி மற்றும் மராத்தியில் தலா 12 படங்களும் தடை செய்யப்பட்டதாக தணிக்கைக்குழு தெரிவித்துள்ளது.