சினிமா

திரை நட்சத்திரங்கள் விடுக்கும் ‘மாஸ்க் இந்தியா’ அழைப்பு - நீங்க ரெடியா? 

திரை நட்சத்திரங்கள் விடுக்கும் ‘மாஸ்க் இந்தியா’ அழைப்பு - நீங்க ரெடியா? 

webteam
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல்விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட், செல்போன் பிளாஷ் உள்ளிட்டவற்றால் ஒளியேற்றும்படி பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று நாடுமுழுவதும் மக்களுடன் இணைந்து பல்வேறு தலைவர்களும் தீபங்களை ஏற்றினர். டெல்லியில் உள்ள தமது இல்லம் முன்பு வைக்கப்பட்டிருந்த 7 அடி குத்துவிளக்கைப் பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். 
இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்து ஆராய்ச்சியாளர்கள் தினம் தினம் ஒரு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை,  சர்வதேச சுகாதார ஆலோசகர்கள் கொரோனா அறிகுறி உள்ளவர்கள், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் இப்போது வெளியே வரும் அனைவரும் முகக்கவசத்தை அணிய வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஏனெனில் காற்றின் மூலமும் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதாக சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகின்றன. இருப்பினும், இது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  
ஒரு பக்கம் கட்டாயம் அணிய வேண்டும் எனக் கூறினாலும் மறுபுறம் முகக்கவசம் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. அதுவும் என்95 தரத்திலான மாஸ்க் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், முறையான முகக்கவசம் இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் வீட்டில் உள்ள பருத்தி துணியிலான முகக்கவசங்களை தயாரித்து நீங்களே பயன்படுத்துங்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 
இந்நிலையில், இதனை மனதில் கொண்டு திரை நட்சத்திரங்கள் பலரும்  சமூக ஊடகங்களில் #MaskIndia initiative என்ற ஹேஷ்டேக் போட்டு ‘மாஸ்க் சேலஞ்ச்’எடுத்து வருகின்றனர். அவர்கள் அணியும் முகக்கவசத்துடன் புகைப்படத்தையும் பதிவேற்றி வருகின்றனர்.  இது குறித்து அவர்கள் கருத்தையும் கூறி வருகின்றனர். அப்படி புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள சில நட்சத்திரங்கள் என்ன சொல்கிறார்கள்? என்ன எழுதியிருக்கிறார்கள்? பார்ப்போம். 
டாப்ஸி பானு:  
உங்களது பாதுகாப்புக்காக நீங்கள் முகக்கவசத்தை அணிய வேண்டும். ஒருவர் தும்பினால் சில மீட்டர் தூரம் வைரஸ் பரவும்.  அது பரவ சில வினாடிகளுக்கு மேல் ஆகாது. ஜாக்கிரதையாக  இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், முகக்கவசத்தை அணியுங்கள்.
அதிதி ராவ் ஹைதரி:
நாட்டை கொரோனா வைரஸிலிருந்து விடுவிப்பதற்கான ஒரே வழி, ஊரடங்கு உத்தரவை நாம் கண்டிப்பாக கடைப்பிடிப்பது. சமூக விலகலைப் பராமரிப்பதுதான். உங்களுக்கு சளி, இருமல் அல்லது காய்ச்சல் இருந்தால், உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது. வைரஸ் பரவாமல் இருக்க முகக்கவசத்தை அணியுங்கள்.
சிம்ரன்
முகக்கவசத்தை அணிவது நமது சொந்த பாதுகாப்புக்காக மட்டுமல்ல, குடும்பத்துக்கும் கூடதான். இதுபோன்ற சமயங்களில், மற்றவர்களுடன் பேசும்போது வைரஸ் பரவாமல் இருக்க முகக்கவசத்தை அணிவது முக்கியம்.
ரைசா வில்சன்:
இந்தச் சிக்கல் தீவிரமானது. இப்போது நாம் செய்யக்கூடிய ஒரே விஷயம் வீட்டிலேயே தங்குவதுதான். இல்லையென்றால்  நீங்கள் பாதிக்கப்பட மாட்டீர்கள்.  தனிப்பட்ட சுகாதாரத்தைப் பராமரிக்கவும். எனவே வெளியே செல்ல வேண்டாம். இந்த நோய் பரவுவதற்கான சங்கிலியை உடைக்க வேண்டும். எப்போதும் உங்களது கைகளைக் கழுவுங்கள், உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் வெளியேற வேண்டும் என்றால், முகக்கவசத்தை அணியுங்கள்.
விஜய் தேவரகொண்டா:
நீங்கள் மளிகை சாமான்களை வாங்க வெளியே செல்ல வேண்டியிருந்தால், உங்கள் முகத்தை மறைக்க தாவணி அல்லது கைக்குட்டை வைத்து மறைத்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து உங்களுக்கு எனச்  சொந்த முகக்கவசத்தை செய்து கொள்ளுங்கள்.  N95 மற்றும் அறுவை சிகிச்சை முகக்கவசங்களை சுகாதார நிபுணர்களுக்கு விட்டுக் கொடுங்கள். இந்தச் சிறிய செயல் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.