சினிமா

நடிகர் விவேக் மறைவு சொல்லிமாளாத வேதனை... துக்கத்தில் தழுதழுத்த திரைப் பிரபலங்கள்!

நடிகர் விவேக் மறைவு சொல்லிமாளாத வேதனை... துக்கத்தில் தழுதழுத்த திரைப் பிரபலங்கள்!

JustinDurai

மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார். அவரது மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் விவேக்குடன் நடித்த சில திரை பிரபலங்கள் அவருடனான அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கின்றனர். 

நடிகர் ஆனந்தராஜ் கூறுகையில், ''விவேக் எனது நீண்டகால நண்பர். ரொம்ப நல்லவங்களாக இருந்தால் கடவுள் சீக்கிரம் எடுத்துக் கொள்வாரா என்று தெரியவில்லை. 'பிகில்'  பட சூட்டிங்கின்போது நிறைய விஷயங்களைப் பற்றி பேசுவோம். அவரது மறைவு எனக்கு பேரிடி. கலைக்குடும்பத்திற்கு பேரிழப்பு. சமீபத்தில்தான் அவரது வீட்டுக்கு சென்று வந்தேன். மிக அன்பான குடும்பம். நடிகர் விவேக்கை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கட்டும்.'' எனத் தெரிவித்தார்.

நடிகர் மயில்சாமி கூறுகையில், ''நான் தினந்தோறும் அவருடன் தொடர்பில் இருந்தவன். சமீபத்தில் ஒரு ஹோட்டலில் விவேக்கை சந்தித்தபோது, 'நான் ஊசி (கொரோனா தடுப்பூசி) போட்டேன்டா நீ எப்போ போட போற' என்று கேட்டார். 'நான் அடுத்த வாரம் போடலாம்னு இருக்கேன் சார்'  என்று நான் சொன்னேன். அந்த மனுஷன் நிறைய தர்மம் பண்ணியிருக்கார். எனக்கும் நிறைய உதவி பண்ணியிருக்கார்'' என்று தொடர்ந்து பேசமுடியாமல் தழுதழுத்தார். 

நடிகர் யோகி பாபு கூறுகையில், '' தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு. 'அரண்மனை' சூட்டிங்கின்போது விவேக் என்னிடம் பேசும்போது, ''ஒரு நடிகனுக்கு நல்ல பேர், புகழ் இருக்கும்டா. ஆனால் ஒரு நல்ல மனைவி கிடைக்கிறது அதைவிட பெரிய விஷயம். அது உனக்கு கிடைச்சிருக்கு. நல்லா இருடா' என்று வாழ்த்தினார். இப்படி விவேக் சார் எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணியிருக்கார். ஒரு காலக்கட்டத்தில் எம்.ஆர்.ராதாவின் கருத்து அனைவருக்கும் சென்றடைந்தது. அவருக்குப் பின் நல்ல நல்ல கருத்துடன் கூடிய காமெடியை தமிழ் சினிமாவிற்கு வழங்கியது விவேக் சார்தான். ஒரு காமெடி நடிகர் இன்னொரு காமெடி நடிகரை பாரட்ட மாட்டாங்க. ஆனால் விவேக் சார் ஒரு தம்பிக்கு அட்வைஸ் பண்ற மாதிரி எனக்கு பண்ணினார்.'' என்றார்.

 கலாமின் ஆதரவாளரான பொன்ராஜ், ''அப்துல் கலாமின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தவர் விவேக். வெறும் கருத்துக்களை மட்டும் அவர் சொல்லிவிட்டு போகவில்லை. அதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் விவேக். நேற்று முன் தினம்தான் ஊசி போட்டுக்கொண்டார். அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள். இருந்தாலும் இந்த வயதிலேயே அவர் இறந்தது மிகவும் வேதனையளிக்கிறது” என்றார்.