சினிமா

“நாலு லட்சம் சம்பள பாக்கியை கொடுங்கள்” -‘மெர்சல்’ மேஜிக் கலைஞர் புகார்

rajakannan

‘மெர்சல்’ படத்தில் பணியாற்றிய தனக்கு இன்னும் கடன் பாக்கி வைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் மீது மேஜிக் கலைஞர் புகார் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘மெர்சல்’ படம் வெளியானது. எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, வடிவேலு, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். ராம.நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்தது.  இந்தப் படத்தில் மூன்று கதாப்பாத்திரங்களில் விஜய் நடித்திருந்தார். அதில் ஒரு கதாபாத்திரம் மேஜிக் நிபுணராக வருவார். 

மேஜிக் பற்றிய விஷயங்களை அறிந்து கொண்டால்தான் இந்தப் பாத்திரத்தில் தத்ரூபமாக நடிக்க முடியும் என்பதற்காக விஜய்க்கு படப்பிடிப்பின் போது மேஜிக் கற்றுக் கொடுக்கப்பட்டதாக அப்போது செய்திகள் வெளியானது. அதற்காக வெளிநாட்டில் இருந்து வந்த மேஜிக் நிபுணர்கள் விஜய்க்கு மேஜிக் கற்றுக் கொடுத்தனர். இந்தப் படத்திற்காக மொத்தம் மூன்று மேஜிக் நிபுணர்கள் பணியாற்றியதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், ‘மெர்சல்’ படத்தில் பணியாற்றியதற்கான சம்பள பாக்கி ரூ4 லட்சம் உள்ளதாக கனடாவைச் சேர்ந்த மேஜிக் கலைஞர் ராமன் சர்மா புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஒரு வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதோடு, தேனாண்டாள் நிறுவனத்தின் உரிமையாளர் ஹேமாவின் கணவர் முரளியுடன் வாட்ஸ் அப்பில் பரிமாறிக் கொண்ட கருத்துக்களையும் ஆதாரமாக வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், ‘தனக்கு இன்னும் ரூ4 லட்சம் ரூபாய் கடன் பாக்கி இருக்கிறது. ஆனால், என்னுடைய தொலைபேசி அழைப்பை தயாரிப்பு நிறுவனத்தினர் எடுப்பதில்லை. சென்னையில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் மக்கள் மிகவும் அற்புதமானவர்கள். ஆனால், உண்மையை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவினை செய்கிறேன்” என்று கூறியிருந்தார்.  

‘மெர்சல்’ திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது 4 லட்சம் ரூபாய் கடன்பாக்கி உள்ளதாக மேஜிக் கலைஞர் புகார் தெரிவித்துள்ளது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

இது சம்பந்தமாக ஸ்ரீதேனாண்டாள் நிர்வாகியும் ராம நாராயணன் மகனுமான முரளியை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவரது இணைப்பு சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. உரிய விளக்கம் வந்தால் அதனையும் வெளியிட தயாராக உள்ளோம்.