சினிமா

"இரண்டாம் குத்து" டீசரை உடனடியாக நீக்குங்கள் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

"இரண்டாம் குத்து" டீசரை உடனடியாக நீக்குங்கள் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Sinekadhara

"இரண்டாம் குத்து"திரைப்படத்தின் டீசரை உடனடியாக அனைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

"படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள், காட்சிகள் ஆபாசமானதாக, இரட்டை அர்த்தம் கொண்டவையாக, எவ்வித நாகரீகமும், நன்னெறியுமின்றி இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், இது போன்ற டீசர்கள் மின்னனு தொலைத்தொடர்பு சாதனங்களில் பரவுவது நல்ல விளைவை ஏற்படுத்தாது. குற்றங்களை அதிகரிக்கச் செய்ய வாய்ப்புள்ளது" நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மதுரை அனுப்பாடியைச் சேர்ந்த லெட்சுமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," திரைப்படங்கள் பாரம்பரியத்தை பிரதிபலிப்பவையாக உள்ளன. ஆனால் ஒரு சிலர், வணிக நோக்கில் மிக மோசமான ஆபாசமான விஷயங்களை இளைய சமுதாயத்திடம் கொண்டு சேர்க்கும் வகையில் திரைப்படங்களை எடுக்கின்றனர். இவை சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கவும் காரணமாக அமைகின்றன.

தற்போது "இரண்டாம் குத்து" எனும் பெயரில் திரைப்படம் ஒன்றின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் இருக்கும் வசனங்களும், காட்சிகளும் ஆபாசமாகவும், முகம் சுளிக்கும் வகையிலும் உள்ளது. அதற்கான போஸ்டரும் மிகவும் ஆபாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பே இரட்டை அர்த்தம் கொண்டதாக உள்ளது. ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் பயில்வதற்காக அதிக அளவில் இணையதளங்களை சார்ந்திருக்கும் சூழலில் இதுபோன்ற திரைப்படத்தின் டீசர் இணைய தளத்தில் வெளியானது ஏற்கத்தக்கதல்ல. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டத்தின்கீழ் இது தடை செய்யப்பட வேண்டும். ஆகவே இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்களை உடனடியாக அனைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து நீக்கவும், படத்தை வெளியிட நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். " என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில்," இந்த படத்தை தணிக்கை குழுவினர் தணிக்கை செய்து, 32 cut செய்தே A சான்றிதழுடன் அனுமதி அளித்தது" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “படத்தின் டீசர் வெளியாகி பகிரப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள், காட்சிகள் ஆபாசமானதாக, இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளன. எவ்வித நாகரீகமும், நன்னெறியுமின்றி இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், இது போன்ற டீசர்கள் மின்னனு தொலைத்தொடர்பு சாதனங்களில் பரவுவது நல்ல விளைவை ஏற்படுத்தாது. இது போன்ற டீசர்கள் குற்றங்களை அதிகரிக்கச் செய்ய வாய்ப்புள்ளது.

ஆகவே, இரண்டாம் குத்து திரைப்படத்தின் ட்ரெய்லரை அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களிலிருந்தும் உடனடியாக நீக்க வேண்டும்” என்று  உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கை டிசம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், இது குறித்து தமிழக உள்துறை செயலர், தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், திரைப்பட தணிக்கைக்குழு மண்டல அலுவலர், DGP, படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும், விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர்.