ரன்பிர் கபூர் ஆலியா பட் தம்பதியின் திருமணத்துக்கு முன் இருவரும் ஜோடியாக நடித்து வெளியான படம் பிரம்மாஸ்திரா. அமிதாப் பச்சன், ஷாருக் கான், நாகார்ஜுனா, மவுனி ராய் என பல நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருந்த இந்த படம் திரையரங்கில் இந்தி, தமிழ், தெலுங்கு என 5 மொழிகளிலும் வெளியான போது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாஸ்திராவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வரவேற்பு இருக்கவில்லை.
இந்த நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிரம்மாஸ்திரா படம் வெளியிடப்பட்டிருக்கிறது. படத்தின் கதை, அனிமேஷன், நடிப்பு எல்லாவற்றையும் தாண்டி ரன்பிரை ஷிவா என வெவ்வேறு ரியாக்ஷனில், எமோஷனலில் ஆலியா பட் அழைப்பதுதான் தற்போது ட்விட்டர் தளத்தில் வைரலாகி பட்டையக்கிளப்பி வருகிறது.
இதனை @krishlovesmovies ட்விட்டர் பயனர், “Brahmastra Shiva cut" எனக் குறிப்பிட்டு ஆலியாவின் இஷா கதாப்பாத்திரம் ரன்பிரின் ஷிவா கதாப்பாத்திரத்தை அழைக்கும் காட்சிகளை மட்டும் வெட்டி வீடியோவாக பகிர்ந்திருக்கிறார்.
இந்த வீடியோவை கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேலானோர் இதுவரை பார்த்திருக்கிறார்கள். ட்விட்டரில் பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே வீடியோ வைரலான நிலையில், பிரம்மாஸ்திராவில் ரன்பிரை ஆலியா 80க்கும் அதிகமான முறை ஷிவா என அழைத்திருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் வேலை மெனக்கெட்டு எண்ணி பதிவிட்டிருக்கிறார்கள்.
இதுபோக, படத்துக்கு ஹாட் ஸ்டார் தளத்தில் கிடைத்திருக்கும் வியூஸை விட இந்த பிரம்மாஸ்திரா ஷிவா கட் வீடியோவுக்கே அதிக வியூஸ் கிடைத்திருக்கும் என்றும் கிண்டலாக கமெண்ட் செய்திருக்கிறார்கள்.