சினிமா

#BoycottRRRinKarnataka ட்ரெண்டாக்கும் கன்னட சினிமா ரசிகர்கள் - என்ன காரணம்?

#BoycottRRRinKarnataka ட்ரெண்டாக்கும் கன்னட சினிமா ரசிகர்கள் - என்ன காரணம்?

சங்கீதா

இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டாக உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை கர்நாடக மாநிலத்தில் புறக்கணிக்குமாறு, கன்னட சினிமா ரசிகர்கள் ஆவேசம் காட்டி வருகின்றனர்.

பிரபாஸ் நடிப்பில் உருவான ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்திற்குப் பிறகு, இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. பான் இந்தியா படமாக, 3டி தொழில்நுட்பத்திலும் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், உலகம் முழுவதும் நாளை மறுதினம் வெளியாக உள்ளது.

400 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளநிலையில், கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யாமல், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலேயே, கர்நாடாகாவில் வெளியாக உள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனால் மொழிபற்றால் பொங்கியெழுந்த அம்மாநில சினிமா ரசிகர்கள், திடீரென #BoycottRRRinKarnataka என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, ட்விட்டரில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை புறக்கணியுங்கள் என்று ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

ஒரு திரையரங்கில் கூட இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று ரசிகர்கள் ட்விட்டரில் ஆவேசம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பட வெளியீட்டு நிகழ்ச்சியில், கர்நாடக முதலமைச்சர் கலந்து கொண்டு படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்திருந்தார். அதேபோல் கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தை, கன்னட மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட வேண்டும் என்று, ராஜமௌலியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

கன்னட மொழியை புறக்கணித்து விட்டு பான் இந்தியா படமென ராஜமெளலி பிரச்சாரம் செய்வதால் கன்னட ரசிகர்கள் இந்த படத்திற்கு எதிராக எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகின்றனர். மேலும், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்கு முன்னதாக வெளியான ‘புஷ்பா’, ‘ராதே ஷ்யாம்’ படங்களும் கன்னட மொழியை புறக்கணித்ததாக கன்னட ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை இந்த மாதம் எதிர்த்தால், அடுத்த மாதம் வெளியாக உள்ள ‘கேஜிஎஃப் சாப்டர் 2’ படத்தை எதிர்ப்போம் என்று பதிலுக்கு தெலுங்கு திரையுலக ரசிகர்களும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.